கஞ்சா விற்ற வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
கோவையில் கஞ்சா விற்ற வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு உத்தரவிட்டது.
கோவை
கோவையில் கஞ்சா விற்ற வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு உத்தரவிட்டது.
கஞ்சா விற்பனை
கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் செல்லும் சாலையில் உள்ள மின்மயானம் அருகில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ராமநாதபுரம் போலீசாருக்கு கடந்த 22.6.2020-ம் ஆண்டு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து சோதனை செய்தனர். இதில் அவரிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கோவை அம்மன்குளத்தை சேர்ந்த அபி என்கிற அபிலாஷ் (வயது 30) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
10 ஆண்டு சிறை
இதுகுறித்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள இன்றியமையா பொருட்கள் மற்றும் போதை பொருள் தடுப்பு கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கஞ்சா விற்ற அபி என்கிற அபிலாஷ்க்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சிவக்குமார் ஆஜராகி வாதாடினார்.