அம்பத்தூரில் பட்டப்பகலில் வாலிபர் வெட்டிக்கொலை


அம்பத்தூரில் பட்டப்பகலில் வாலிபர் வெட்டிக்கொலை
x

அம்பத்தூரில் பட்டப்பகலில் அண்ணன் கொலைக்கு பழிக்குப்பழியாக வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தப்பி ஓடிய 9 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

திரு.வி.க. நகர்,

சென்னை அம்பத்தூர் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 20). ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று மதியம் அயப்பாக்கம் சாலையில் கார்த்திக் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 9 பேர் கொண்ட கும்பல் கார்த்திகை வழிமறித்து, கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். இதில் படுகாயம் அடைந்த கார்த்திக், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த அம்பத்தூர் போலீசார், கொலையான கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பழிக்குப்பழியாக சம்பவம்

விசாரணையில் கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதி அம்பத்தூர் சிவானந்தா நகர் பகுதியில் வசித்து வந்த லோகேஷ் என்ற கார்த்திக் (27) மற்றும் அவருடைய தம்பி வெங்கடேஷ் (21) ஆகிய 2 பேரையும் அம்பத்தூர் எஸ்டேட், கலைவாணர் நகரில் ஒரு கும்பல் சரமாரியாக கத்தியால் குத்தினர். இதில் லோகேஷ் என்ற கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயத்துடன் வெங்கடேஷ் உயிர் தப்பினார்.

இந்த வழக்கில் அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் சண்முகம் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். உயிர் தப்பிய வெங்கடேஷ், தனது அண்ணன் லோகேஷ் என்ற கார்த்திக் கொலைக்கு பழிக்குப்பழியாக கைதான சண்முகத்தின் தம்பியான கார்த்திக்கை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். தப்பி ஓடிய 9 பேர் கொண்ட கொலை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story