பட்டப்பகலில் வீடு புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை; 8 பேர் கும்பலுக்கு வலைவீச்சு


பட்டப்பகலில் வீடு புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை; 8 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
x

பொத்தேரி அருகே பட்டப்பகலில் 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று வீடு புகுந்து வாலிபரை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடினர்.

செங்கல்பட்டு

8 பேர் கொண்ட கும்பல்

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பெரியார் தெருவை சேர்ந்தவர் சந்துரு (வயது 27). இவர் மீது மறைமலை நகர் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் சிறைக்கு சென்ற இவர், சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இவரது மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக பொத்தேரி அருகே தைலாவரம் கம்பர் தெருவில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு நேற்று காலை சென்றுள்ளார்.

இந்த தகவலை அறிந்து 4 மோட்டார் சைக்கிளில் 8 பேர் கொண்ட கும்பல் திடீரென சந்துருவின் மாமியார் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்தனர்.

வெட்டிக்கொலை

பின்னர், அவரை சுற்றி வளைத்து மனைவி, மாமியார் கண் முன்னே சரமாரியாக வீச்சு அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சந்துரு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தடுக்க முயன்ற சந்துருவின் மனைவிக்கும் வீச்சு அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்துருவின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையாளிகளுக்கு வலைவீச்சு

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து முன் விரோதம் காரணமாக சந்துரு வெட்டி கொலை செய்யப்பட்டாரா? அல்லது கஞ்சா விற்பனை போட்டியில் கொலை செய்யப்பட்டாரா? உள்பட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். குற்றவாளிகளை பிடிப்பதற்காக போலீசார் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அந்த தனிப்படை போலீசார் தைலாவரம் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ள காட்சி அடிப்படையில் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story