ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபா் படுகாயம்
வெள்ளியணை அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபரை 5 கிலோ மீட்டர் தேடி சென்று தீயணைப்பு படைவீரர்கள் மீட்டனர்.
தவறி விழுந்த வாலிபர்
நாகர்கோவிலில் இருந்து கரூர் வழியாக கோவைக்கு நேற்று முன்தினம் அதிகாலை எக்ஸ்பிரஸ் ெரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த ெரயில் கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே வந்தபோது, படிக்கட்டில் பயணம் செய்த ஒரு வாலிபர் தவறி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக பயணி இதுகுறித்து கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.அதன்பேரில் கரூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீஷ் மற்றும் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான 8 பேர் கொண்ட தீயணைப்பு படைவீரர்கள் மணவாடியில் இருந்து வெள்ளியணை செல்லும் ெரயில்வே தண்டவாளத்தில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் தேடினர்.
தீயணைப்பு படைவீரர்கள் மீட்டனர்
இதில் கரூர் செல்லாண்டிபட்டி அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் 30 வயது மதித்தக்க வாலிபர் உடலில் காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அந்த வாலிபரை மீட்டு சுமார் அரை கிலோ மீட்டர் தோளில் சுமந்து கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அந்த வாலிபரை சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து கரூர் ெரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த வாலிபர் பெயர் சிக்கந்தர் பாட்ஷா (வயது 30) என்பதும், மதுரையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு கோவைக்கு ெரயிலில் வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து உறவினர்களுக்கு ரெயில்வே போலீசார் தகவல் தெரிவித்தனர்.