மின்சாரம் தாக்கி வாலிபர் படுகாயம்
சின்னசேலம் அருகே பராமரிப்பு பணியின்போது மின்சாரம் தாக்கி வாலிபர் படுகாயம் அஜாக்கிரதையாக மின் இணைப்பு கொடுத்த 5 ஊழியர்கள் மீது வழக்கு
சின்னசேலம்
சேலம் மாவட்டம், தலைவாசல் அடுத்த நாவகுறிச்சி கிராமம், கிழக்கு காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் பிரபாகரன்(வயது 30). இவர் தனியார் நிறுவனம் மூலம் மின் வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக கடந்த 4 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று பிரபாகரன் சின்னசேலம் அருகே உள்ள தோட்டப்பாடி கிராமத்தில் உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தன்னுடன் பணியாற்றிய ஒப்பந்ததாரர் கோகுல்ராஜ், போர் மேன் பிச்சநாதன், வயர்மேன் ராமலிங்கம், லைன்மேன் முருகேசன், உதவியாளர் சிவராமன் ஆகியோர் அஜாக்கிரதையாக மின் இணைப்பு கொடுத்ததாக தெரிகிறது. இதனால் 30 அடி உயரத்தில் இருந்த பிரபாகரன் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவருக்கு வலது காலில் எழுலும்பு முறிவு ஏற்பட்டது. உடனே பிரபாகரனை சக ஊழியர்கள் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்த புகாரின் பேரில் கோகுல்ராஜ் உள்ளிட்ட 5 பேர் மீதும் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.