தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்ற 2 வாலிபர்களின் கதி என்ன?


தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்ற 2 வாலிபர்களின் கதி என்ன?
x
தினத்தந்தி 14 Dec 2022 12:15 AM IST (Updated: 14 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்றபோது தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட 2 வாலிபர்களின் கதி என்ன? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி

சூளகிரி

சூளகிரி அருகே தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்றபோது தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட 2 வாலிபர்களின் கதி என்ன? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நண்பர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 980 கனஅடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்தநிலையில் ஓசூர் சீதாராம் மேடு பகுதியை சேர்ந்த சம்பத் மகன் ஹரீஷ் (வயது18), ராஜகணபதி நகரை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் மது (17) ஆகியோர் நண்பர்கள் 5 பேருடன் நேற்று சூளகிரி அருகே கோபசந்திரம் என்ற இடத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் குளிப்பதற்காக மோட்டார் சைக்கிள்களில் சென்றனர்.

தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்

இதில், ஹரீஷ் நீச்சல் தெரிந்தவர் என்றும், மதுவுக்கு நீச்சல் தெரியாது என்றும் கூறப்படுகிறது. நண்பர்களான ஹரீஷ், மது ஆகிய 2 பேரும் கைகளை ஒன்றாக கோர்த்தவாறு ஆற்றில் குதித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் 2 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற நண்பர்கள் கூச்சல் போட்டனர்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். இவர்கள் இதுகுறித்து சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து 2 பேரையும் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாலிபர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பதறியடித்து வந்தனர். மேலும் அந்த பகுதியில் பொதுமக்கள் குவிந்தனர்.

தேடும் பணி நிறுத்தம்

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி தாசில்தார் அனிதா சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். தென்பெண்ணை ஆற்று பகுதியில் இருள் சூழ்ந்ததால் வாலிபர்களை தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று காலை மீண்டும் வாலிபர்களை தேடும் பணி தொடங்கும் என்று போலீசார் தெரிவித்தார்.

தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 வாலிபர்களின் கதி என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 2 வாலிபர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த பகுதியில் சோகத்துடன் அமர்ந்துள்ளனர். தென்பெண்ணை ஆற்றில் 2 வாலிபர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story