இளம்பெண் சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது
கரூர் அருகே இளம்பெண் இறந்த வழக்கில், தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து 2 நாட்களுக்கு பிறகு இளம்பெண்ணின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
காதல் திருமணம்
கரூர் மாவட்டம், திருக்காடுதுறை பகுதியை சேர்ந்தவர் பூபேஸ் (வயது 32). நாமக்கல் மாவட்டம் ராமதேவம் பகுதியை சேர்ந்தவர் காயத்ரி. இவர்கள் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்ததம்பதிக்கு மிதுன் (3) என்ற குழந்தை உள்ளது.
இந்நிலையில் பூபேஸ் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தனது மனைவி காயத்ரியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 20-ந்தேதி காலையும் கணவன், மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட காயத்ரி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கணவர் கைது
இதையடுத்து காயத்ரியின் உடலை வேலாயுதம்பாளையம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் காயத்ரிவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், சாவிற்கு காரணமான அவரது கணவர் பூபேசை கைது செய்ய வேண்டும், அதுவரை காயத்ரியின் உடலை வாங்க மாட்டோம் என அவரது உறவினர்கள் நேற்று முன்தினம் காலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மனைவிக்கு வரதட்சணை கொடுமை செய்து, தற்கொலைக்கு தூண்டியதாக பூபேஸ் மீது வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர். இதையடுத்து நேற்று காலை காயத்ரியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் காயத்ரியின் உடல் அவரது சொந்த ஊரில் உள்ள சுடுகாட்டில் புதைக்கப்பட்டது.