ஜெயங்கொண்டத்தில் இருந்து சைக்கிளில் லடாக் சென்று திரும்பிய வாலிபர்கள்


ஜெயங்கொண்டத்தில் இருந்து சைக்கிளில் லடாக் சென்று திரும்பிய வாலிபர்கள்
x

ஜெயங்கொண்டத்தில் இருந்து சைக்கிளில் லடாக் சென்று திரும்பிய வாலிபர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

லடாக் சென்றனர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன். முன்னாள் ராணுவ வீரர். இவரது மகன் வினோத்(வயது 18). இவர் பிளஸ்-2 முடித்துள்ளார். இதேபோல் சூரியமணல் கிராமத்தை சேர்ந்த தச்சுத் தொழிலாளியான ரவியின் மகன் ராசு(20). இவர் பட்டய படிப்பு முடித்துள்ளார்.

நண்பர்களான வினோத்தும், ராசுவும் கடந்த மாதம் 1-ந் தேதி ஜெயங்கொண்டத்தில் இருந்து 2 சைக்கிள்களில் புறப்பட்டு சென்று, 31-ந் தேதி லடாக்கை அடைந்தனர். அங்கு அவர்கள் ஒரு நாள் தங்கியிருந்தனர். பின்னர் கடந்த 2-ந் தேதி லடாக்கில் இருந்து அவர்கள் சைக்கிள்களில் புறப்பட்டு, நேற்று ஜெயங்கொண்டத்தை வந்தடைந்தனர். இதில் ராசு, அரசு பள்ளியில் வழங்கிய சைக்கிளிலேயே லடாக்கிற்கு சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

தேசத்தின் ஒற்றுமைக்காகவும், பொதுமக்களுக்காக ராணுவத்தினர் லடாக்கில் படும் துயரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து நாட்டை காக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் விதமாகவும் இந்த சைக்கிள் பயணத்தை மேற்கொண்டோம். செல்போனில் கண்ட வரைபட வழித்தட உதவியுடன் இந்த பயணத்தை மேற்கொண்டோம். ஒரு நாளைக்கு 150 முதல் 200 கிலோ மீட்டர் வரை பயணம் செய்தோம்.

வழியில், எங்களிடம் இருந்த பணத்தை கொண்டு சாலையோர கடைகளில் கிடைத்த உணவை சாப்பிட்டோம். இரவு நேரங்களிலும் எங்களது பயணத்தை தொடர்ந்தோம். ஓய்வு தேவைபட்டபோது சாலையோர பகுதியிலும், பெட்ரோல் விற்பனை நிலையம் போன்ற இடங்களிலும் தூங்கினோம். ஜம்மு பகுதியில் சென்றபோது சில கடைக்காரர்கள் தாமாக முன்வந்து, அவர்களது கடைகளில் தங்க எங்களை அனுமதித்தனர். லடாக்கில் ராணுவ வீரர்களை சந்தித்த பின்னர், அங்கு ஒரு நாள் தங்கியபோது எங்களுக்கு தேவையான உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளை ராணுவ வீரர்கள் செய்து கொடுத்தனர்.

உற்சாக வரவேற்பு

ெஜயங்கொண்டத்தில் இருந்து லடாக்கிற்கு சென்று வர தலா 4,200 கிலோ மீட்டர் என மொத்தம் 8,400 கிலோ மீட்டர் தூரம் என்பது மிகவும் கடினமாக இருந்தாலும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த சென்று வந்ததற்காக பெருமைப்படுகிறோம். பொதுமக்கள் தந்த உற்சாகத்தால் எங்களுக்கு தூரம் தெரியவில்லை.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே ஜெயங்கொண்டத்திற்கு வரும் வழியில் அவர்களுக்கு போலீஸ் அதிகாரிகள், ரோட்டரி சங்கத்தினர், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் சார்பில் உற்சாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story