பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: மேலும் 2 போலீசார் மீது வழக்கு -சி.பி.சி.ஐ.டி. நடவடிக்கை


பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: மேலும் 2 போலீசார் மீது வழக்கு -சி.பி.சி.ஐ.டி. நடவடிக்கை
x

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் 2 போலீசார் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் அம்பை கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களுக்கு பற்கள் பிடுங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அப்போதைய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டவர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தொடர்ந்து உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மற்றும் சிலர் மீது மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்ரகு 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். இதற்கிடையே, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் உலகராணி அம்பை கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் விசாரணை மேற்கொண்டார். பின்னர் பல்வீர்சிங் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

7 பேருக்கு சம்மன்

இந்த நிலையில், விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் சிறுவனுக்கு பற்கள் பிடுங்கப்பட்டதாக அருண்குமார் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் சி.பி.சி.ஐ.டி. ஆர்கனைஸ்டு கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் விசாரணை நடத்தி உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்.அதேபோல் வேதநாராயணன் என்பவர் கொடுத்த புகாரின்பேரிலும் பல்வீர்சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராக அருண்குமார், பாதிக்கப்பட்ட சிறுவன் உள்ளிட்ட 7 பேருக்கு சம்மன் அனுப்பட்டு உள்ளது.

2 போலீசார் மீது வழக்கு

இந்த நிலையில் அருண்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலைத்தில் பணியாற்றிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், தனிப்பிரிவு போலீஸ்காரர் போகன் குமார் ஆகியோர் மீதும் தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்துதல், ஆயுதத்தால் தாக்கி காயம் ஏற்படுத்துதல், கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொடுங்காயத்தை ஏற்படுத்துதல், மிரட்டல் விடுதல், வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் 3 பிரிவுகள், சிறார்களை துன்புறுத்துதல் ஆகிய 8 பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த நடவடிக்கை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Next Story