பற்களை பிடுங்கிய விவகாரம்: உதவி போலீஸ் சூப்பிரண்டு மீது சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு


பற்களை பிடுங்கிய விவகாரம்: உதவி போலீஸ் சூப்பிரண்டு மீது சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு
x

போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களைப் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக, உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் அம்பை காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியது தொடர்பாக, உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்ரகு விசாரணை நடத்தினார்.

இதற்கிடையே, பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.

தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியாக நெல்லை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகராணி நியமிக்கப்பட்டார். இதையடுத்து வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்ரகு, சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரி உலகராணியிடம் ஒப்படைத்தார்.

நேற்று முன்தினம் விசாரணையை தொடங்கிய சி.பி.சி.ஐ.டி. போலீசார், கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் அறை உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வு செய்தனர். கிராம நிர்வாக அதிகாரியையும் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து விசாரணையின் அடிப்படையில் நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் மற்றும் சிலர் மீது பதிவு செய்த கொடுங்காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் மீண்டும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர்.2-வது நாளாக நேற்று வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சரிபார்த்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story