பற்களை பிடுங்கிய விவகாரம்: முதல்நாள் விசாரணை நிறைவு - பாதிக்கப்பட்டவர்கள் யாரும் ஆஜராகவில்லை என தகவல்


பற்களை பிடுங்கிய விவகாரம்: முதல்நாள் விசாரணை நிறைவு - பாதிக்கப்பட்டவர்கள் யாரும் ஆஜராகவில்லை என தகவல்
x

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் விசாரணை அதிகாரி அமுதா முன்பு பாதிக்கப்பட்டவர்கள் யாரும் ஆஜராகவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

அம்பை,

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் விசாரணை அதிகாரி அமுதா முன்பு பாதிக்கப்பட்டவர்கள் யாரும் ஆஜராகவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பை சரகத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக எழுந்த புகாரையடுத்து உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

இதுதவிர அம்பை, விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி பகுதி போலீஸ் அதிகாரிகள் சிலர் காத்திருப்போர் பட்டியலுக்கும், ஆயுதப்படைக்கும் மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவுப்படி, சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் விசாரணை மேற்கொண்டார். அவர், பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவை தமிழக அரசு நியமித்தது. இதையடுத்து விசாரணை அதிகாரி அமுதா நேற்று நெல்லை வந்தார். தொடர்ந்து கலெக்டரிடம் சம்பவம் குறித்து அவர் கேட்டறிந்தார். பின்னர் நேற்று மாலையில் அதிகாரி அமுதா, தனது விசாரணையை தொடங்கினார். அப்போது சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் தனது விசாரணை தொடர்பாக நடந்த சம்பவங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

இதைத் தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு அம்பை தாலுகா அலுவலகத்தில் இருந்து அமுதா ஐ.ஏ.எஸ். விசாரணையை தொடங்கினார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நடத்தும் அதிகாரி அமுதாவின் முதல்நாள் விசாரணை தற்போது நிறைவடைந்துள்ளது. விசாரணை அதிகாரி அமுதா முன்பு பாதிக்கப்பட்டவர்கள் யாரும் ஆஜராகவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. தற்போது விசாரணை அதிகாரி அமுதா அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து நெல்லை புறப்பட்டு சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story