கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது.
சமயபுரம் மாரியம்மன் கோவிலின் உப கோவிலான போஜீஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நேற்று நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் உள்ள கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக பால், நெய், இளநீர், கரும்பு உள்ளிட்ட 16 பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும், அதைத்தொடர்ந்து வடை மாலை சாத்தப்பட்டு கால பைரவருக்கு தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து போஜீஸ்வரர் மற்றும் ஆனந்தவல்லி தாயாருக்கு தீபாரதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கால பைரவரை பயபக்தியுடன் வணங்கினர். இதேபோல், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், மண்ணச்சநல்லூர் பூமிநாதசாமி கோவில், திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
தா.பேட்டையில் காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவிலில் பஞ்சமுக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள், வழிபாடுகள் நடந்தது. அப்போது பஞ்சமுக பைரவருக்கு சந்தனம், பால், தயிர், தேன், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தது. அதனை தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமுக பைரவர் பக்தர்களுக்கு அருளினார். இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு விளக்கேற்றி வழிபட்டனர்.