'தேஜஸ்' எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்தில் நின்று செல்லும் -ரெயில்வே வாரியம் அறிவிப்பு


தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்தில் நின்று செல்லும் -ரெயில்வே வாரியம் அறிவிப்பு
x

‘தேஜஸ்' எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்திலும் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

சென்னை எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, திருச்சி, திண்டுக்கல் ரெயில் நிலையங்கள் வாயிலாக மதுரை நோக்கியும், மறுமார்க்கமாக மதுரையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு சென்னை நோக்கியும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. வாரத்தில் வியாழக்கிழமைகளை தவிர, மற்ற அனைத்து நாட்களிலும் இந்த ரெயில் இயக்கப்படுகிறது

முதலில் இந்த ரெயில் சென்னை எழும்பூர், திருச்சி, கொடைரோடு (திண்டுக்கல்) வழியாக மதுரைக்கு சென்றது. பின்னர், திண்டுக்கல் மாவட்ட மக்கள் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் தேஜஸ் ரெயில் நின்று செல்ல பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர். இதையடுத்து கொடைரோட்டுக்கு பதிலாக திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்தது.

இதைத்தொடர்ந்து தேஜஸ் ரெயில் கூடுதலாக தாம்பரம் ரெயில் நிலையத்திலும் நின்று சென்றால், பலர் பயன் அடைவார்கள் என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன.

மத்திய மந்திரிக்கு கடிதம்

இதுதொடர்பாக மத்திய இணை மந்திரி எல்.முருகன் கடந்த ஜனவரி மாதம், மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவுக்கு ஒரு கோரிக்கை கடிதத்தை அனுப்பியிருந்தார். அதில், 'சென்னை-மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலை தாம்பரம் முனையத்தில் நிறுத்த வேண்டும் என்று தமிழக மக்களிடம் இருந்து கோரிக்கை பெற்று பலமுறை வலியுறுத்தி வருகிறேன். இந்த கோரிக்கையை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்று தெரிவித்து இருந்தார். மேலும், அவர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் கோரிக்கை மனுவையும் அந்த கடிதத்துடன் இணைத்து அனுப்பினார்.

சோதனை அடிப்படையில் நின்று செல்லும்

இந்த நிலையில், சென்னை எழும்பூர்-மதுரை இருமார்க்கத்திலும் செல்லும் (வ.எண்.22671, 22672) தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் சோதனை அடிப்படையில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று ரெயில்வே வாரியத்தின் இணை இயக்குனர் விவேக் குமார் சின்ஹா தெரிவித்துள்ளார். மேலும், 26-ந்தேதியில் (நாளை) இருந்து 6 மாதத்துக்கு சோதனை அடிப்படையில் இந்த ரெயில் தாம்பரம் முனையத்தில் நின்று செல்லும் என்றும் அதில் கூறப்பட்டிருக்கிறது.

இதையடுத்து மத்திய இணை மந்திரி எல்.முருகன் தன்னுடைய 'டுவிட்டர்' பக்கத்தில், 'சென்னைவாசிகளின் நீண்ட நாள் கோரிக்கையான, சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லக்கூடிய தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும். தமிழக மக்களின் சார்பில் கொடுத்த கோரிக்கையை ஏற்று உத்தரவு வழங்கிய ரெயில்வே மந்திரிக்கு மிக்க நன்றி' என்று பதிவிட்டுள்ளார்.


Next Story