'`கவர்னரிடம் கூறி நீட் தேர்வை ரத்து செய்ய சொல்லுங்கள்''- ரஜினிகாந்த்துக்கு கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்
“தமிழக கவர்னரிடம் கூறி `நீட்' தேர்வை ரத்து செய்ய சொல்லுங்கள்” என்று நடிகர் ரஜினிகாந்த்துக்கு காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தினார்.
"தமிழக கவர்னரிடம் கூறி `நீட்' தேர்வை ரத்து செய்ய சொல்லுங்கள்" என்று நடிகர் ரஜினிகாந்த்துக்கு காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தினார்.
பாதயாத்திரை
தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதயாத்திரை தென்காசியில் நடைபெற்றது. இதை காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றாலத்தில் இருந்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜனநாயக முறையில் நடைபெற்று வரும் தமிழக அரசை கவர்னர் ஆர்.என்.ரவி மூலம் துன்புறுத்துகிறார்கள். கவர்னர் துணைவேந்தர்களை தன்னிச்சையாக அழைத்து கருத்தரங்கம் நடத்துகிறார். மரபுக்கு விரோதமாகவும், மாநில அரசுக்கு துரோகமாகவும் கவர்னர் ரவி மூலம் பா.ஜ.க. நமது உரிமைகளை பறிக்க முயற்சிக்கிறது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
நடிகர் ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கவர்னரை சந்தித்துள்ளார். ஆனால் சந்தித்து விட்டு வந்து ரஜினிகாந்த் ஒரு கருத்தை கூறியுள்ளார். கவர்னர் ரவி தமிழக மக்களை மிகவும் விரும்புகிறார், தமிழக மக்களுக்கு எது வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாக, கூறியுள்ளார். நல்லது செய்தால் பாராட்ட வேண்டியதுதான்.
தமிழக மக்களுக்கு அவ்வாறு நல்லது செய்ய நினைத்தால் இரண்டு கோரிக்கைகள் ரஜினிகாந்த் கொடுத்திருக்க வேண்டும். ஒன்று `நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும். இது தமிழக மக்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்.
இரண்டாவது, நாம் வரிகளின் மூலம் 6 சதவீதம் மத்திய அரசுக்கு அளிக்கிறோம். ஆனால் திட்டங்களின் மூலம் 1.2 சதவீதம் தான் தமிழகத்திற்கு மத்திய அரசு அளிக்கிறது. இதனையும் அதிகப்படுத்தி கொடுக்க சொல்லுங்கள். தமிழக மக்கள் நடிகர் ரஜினிகாந்த் மீது வைத்திருக்கும் அன்பிற்கு இதை கைமாறாக செய்யுங்கள்.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
குற்றாலத்தில் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்த ஊர்வலம் குடியிருப்பு, நன்னகரம், மேலகரம் வழியாக வந்து தென்காசி பழைய பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்டவற்றை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பொதுக்குழு உறுப்பினர் சட்டநாதன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் கார்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.