பரமத்திவேலூரில் வல்லப விநாயகர் கோவில் மண்டல அபிஷேக விழா
பரமத்திவேலூரில் வல்லப விநாயகர் கோவில் மண்டல அபிஷேக விழா
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூரில் உள்ள வல்லப விநாயகர் கோவில், கன்னிமூல கணபதி, பானலிங்க விஸ்வேஸ்வரர், விசாலாட்சி அம்மன், வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணியர், மகா கால பைரவர் மற்றும் நவக்கிரக சன்னதிகளின் கும்பாபிஷேக மண்டல அபிஷேக நிறைவு விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி திருவாசகம் முற்றோதல் எண்ணும் ஞானவேள்வி விழா காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர். மேலும் கங்கை, யமுனை சரஸ்வதி மற்றும் கோதாவரி உள்ளிட்ட நதிகளில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு அனைத்து சாமிகளுக்கும் கலசம் வைக்கப்பட்டு யாக வேள்விகளும், 108 வலம்புரி சங்கு அபிஷேகமும் நடைபெற்றது. இரவு வானவேடிக்கையும், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வல்லப விநாயகர் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பரமத்திவேலூர் வல்லப விநாயகர் கோவில் விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.