தர்மபுரி மாவட்டத்தில் முருகன் கோவில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
தர்மபுரி மாவட்டத்தில் முருகன் கோவில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கந்தசஷ்டி விழா
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் 58-வது ஆண்டு கந்தசஷ்டி லட்சார்ச்சனை திருவிழா கடந்த 26-ம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடந்தது. பின்னர் கோவில் பிரதான மண்டபத்தில் சிறப்பு யாகசாலை, கணபதி பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனிதநீர் மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து சாமிக்கு லட்சார்ச்சனை தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று நேற்று மாலை வரை 4 காலங்களிலும் சிறப்பு லட்சார்ச்சனை மற்றும் அபிஷேக ஆராதனை, திருமுறை பாராயணத்துடன் நடைபெற்றது.
சூரசம்ஹார விழா
விழாவின் முக்கிய நாளான இரவு அலங்கரிக்கப்பட்ட தங்க மண்டபத்தில் சுப்பிரமணிய சாமி மற்றும் சூரபத்மன் புறப்பாடும், பைபாஸ் ரோட்டில் உள்ள சாமி நிலத்தில் வானவேடிக்கையுடன் சூரசம்ஹாரம் நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு உபகார பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கபட்டது. இதில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 12 மணிக்கு கோவிலில் சாமிக்கு பன்னீர் அபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு பூர்த்தி ஹோமமும், இடும்பன் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகளும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு தெய்வானை திருக்கல்யாணம் உற்சவமும், பொன்மயில் வாகனத்தில் சாமி திருவீதி உலாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உதயகுமார், கோவில் செயல் அலுவலர் ராதாமணி மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்திருந்தனர்.
பாப்பாரப்பட்டி
பாப்பாரப்பட்டி புதிய சுப்பிரமணிய சாமி கோவிலில் கடந்த 25-ந் தேதி கந்தசஷ்டி லட்சார்ச்சனை விழா யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. தினசரி சாமிக்கு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. விழாவில் நேற்று மாலை சாமி சிறப்பு அலங்காரத்துடன் பல்லக்கில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது. பின்னர் கோவில் மண்டபத்தில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் தாயாரிடம் சக்திவேல் வாங்கி சாமி சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்திருந்தனர்.
பாலக்கோடு
பாலக்கோடு பஸ் நிலையம் எதிரே முருகன் கோவில் தெருவில் அமைந்துள்ள ஓம் ஸ்ரீ ஆறுபடை சக்திவேல் முருகன் கோவிலில் கந்தசஷ்டியையொட்டி சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக மூலவர் மற்றும் உற்சவருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. உற்சவ மூர்த்திக்கு பல்வேறு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஓம் ஸ்ரீ ஆறுபடை சக்திவேல்முருகன் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். இதையடுத்து சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏரளாமான பகதர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.