சாலை வசதி இல்லாததால் 6 மாவட்ட பக்தர்கள் அவதி: சிங்காரத்தோப்பு முனீஸ்வரர் கோவில் அருகே சுரங்கப்பாதை விரிவுபடுத்தப்படுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு
மொரப்பூர்:
முறையான சாலை வசதி இல்லாததால் 6 மாவட்ட பக்தர்கள் அவதிக்குள்ளாவதை தடுக்க சிங்காரத்தோப்பு முனீஸ்வரர் கோவில் அருகே உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையை விரிவுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள், பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
தண்டவாளம் அமைக்கும் பணி
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே நடுப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு உள்ள ரெயில்வே தண்டவாளத்தின் அருகில் பிரசித்தி பெற்ற சிங்காரத்தோப்பு முனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் இங்கு அமைவதற்கு காரணமாக ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்திருப்பதாக தல புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த கிராமம் வழியாக சென்னை-கோவை இடையே ரெயில் பாதை அமைக்கும் பணி ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் கடந்த 1860-ம் ஆண்டு நடைபெற்றது.
அப்போது இந்த கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமைக்கப்பட்ட தண்டவாள பகுதி மட்டும் மறுநாள் வந்து பார்க்கும் பொழுது பெயர்ந்து கிடந்ததாக கூறப்படுகிறது.
அந்த பகுதியில் தண்ட வாளத்தை தொழிலாளர்கள் மீண்டும் சீரமைத்தாலும் அடுத்த நாளில் மீண்டும் அந்த பகுதியில் தண்டவாளம் பெயர்ந்து இருக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் தண்டவாளம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழில்நுட்ப பணியாளர்கள், தொழிலாளர்கள் இதற்கு காரணம் என்ன? என்று தெரியாமல் குழப்பம் அடைந்து உள்ளனர்.
6 மாவட்ட பக்தர்கள் வழிபாடு
இந்தநிலையில் தண்டவாளம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஒரு தொழிலாளியின் கனவில் முனீஸ்வரர் வந்து அங்கு களிமண்ணால் முனீஸ்வரருக்கு சிலை அமைத்து வழிபட்டால் தண்டவாளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தடை விலகும் என்று கூறியதாகவும், அதன்படி தொழிலாளர்கள் சிலை வைத்து வழிபாடு நடத்திய பின் அங்கு தண்டவாளப்பணி தடையின்றி நடைபெற்றதாகவும் அந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். திருடு போன பொருட்கள் மீண்டும் கிடைக்க இந்த கோவில் வளாகத்தில் கோழிகளை கட்டி வைக்கும் வழக்கம் பக்தர்களிடம் உள்ளது.
குறுகலான சுரங்கப்பாதை
இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த பகுதியில் அமைந்துள்ள சேலம்-சென்னை இடையிலான ரெயில் தண்டவாளத்தை கடந்து வர வேண்டும். இதற்காக இந்த பகுதியில் தண்டவாளத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதை மிகவும் குறுகலாக இருப்பதால் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் தொடர்ந்து சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். இந்த சுரங்கப்பாதையை விரிவுபடுத்த வேண்டும். இந்த பகுதியில் இருந்து கோவிலுக்கு செல்லும் சாலையை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் நீண்ட காலமாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக பக்தர்கள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
விரிவுபடுத்த வேண்டும்
எம்.கல்லாடிபட்டியை சேர்ந்த சிதம்பரம்:-
தர்மபுரி மாவட்டத்தில் அதிக பக்தர்கள் வந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக சிங்காரத்தோப்பு முனீஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வரும் இந்த கோவிலுக்கு முறையான சாலை வசதி இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. குறிப்பாக இந்த கோவில் அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தின் கீழ் பகுதியில் அமைந்துள்ள சுரங்க பாதை மிகவும் குறுகலாக இருப்பதால் நடந்து வருபவர்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் மட்டுமே இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்த முடிகிறது. எனவே கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இங்குள்ள ரெயில்வே சுரங்க பாதையை கார்கள், வேன்கள் சென்று வரும் வகையில் விரிவுபடுத்த வேண்டும்.
தேங்கும் மழை நீர்
தாமலேரிப்பட்டியை சேர்ந்த வினோத்குமார்:-
மிகப்பழமை வாய்ந்த சிங்காரத்தோப்பு முனீஸ்வரர் கோவிலுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு மாவட்ட பக்தர்கள் வந்து செல்கிறார்கள். மழைக்காலங்களில் ரெயில்வே சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மேலும் மழை காலங்களில் ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் முழுமையாக தேங்கி நிற்பதால் பக்தர்கள் இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்த முடியாமல் தவிப்புக்கு உள்ளாகிறார்கள். மாற்று வழியில் பல கிலோமீட்டர் தூரம் சென்று சுற்றிக்கொண்டு கோவில் அமைந்துள்ள பகுதிக்கு வந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் உள்ள சுரங்க பாதையை விரிவுபடுத்த வேண்டும். இந்த கோவில் அமைந்துள்ள பகுதியில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
கான்கிரீட் தளம்
பெரமாண்டபட்டியை சேர்ந்த கவிதா:-
பல்வேறு வகையான வேண்டுதல்களை நிறைவேற வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜை நடத்த சிங்காரத்தோப்பு முனீஸ்வரர் கோவிலுக்கு ஒவ்வொரு வாரமும் அதிக பக்தர்கள் வருகிறார்கள். ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தி, இங்கே சமைத்து அன்னதானம் வழங்குகிறார்கள். இந்த கோவிலின் சுற்று வட்டார பகுதி மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. இதை கருத்தில் கொண்டு கோவிலின் சுற்றுவட்டார பகுதி முழுவதும் கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும். இதேபோல் அருகே உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் இருந்து கோவில் வளாகம் வரை கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும். இங்கு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.