தைப்பூச திருவிழாவையொட்டிமுருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்


தைப்பூச திருவிழாவையொட்டிமுருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தைப்பூச திருவிழாவையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தைப்பூச திருவிழா

தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவை, மகா தீபாராதனை நடந்தது. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

அதன்படி தர்மபுரியில் பிரசித்தி பெற்ற குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெற்றது. பின்னர் சாமிக்கு தங்ககவச அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பின்னர் பொன்மயில் வாகனத்தில் சாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

அன்னசாகரம்

தர்மபுரி அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் நடைபெற்ற தைப்பூச திருவிழாவில் சாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் எஸ்.வி.ரோடு சுப்ரமணியசாமி கோவில், கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சண்முக நாதர் கோவில், நெசவாளர் நகர் வேல்முருகன் கோவில், பாரதிபுரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதேபோன்று லளிகம் தண்டாயுதபாணி சாமி கோவில், அடிலம் முருகன் கோவில், கம்பைநல்லூர் சுப்பிரமணியசாமி கோவில், இருளப்பட்டி சுப்பிரமணியசாமி கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களிலும் தைப்பூச திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் காவடி எடுத்தும், அழகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி அனைத்து கோவில்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டியில் வேலவன் குன்று வேல் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச விழா சிறப்பாக நடைபெறும். அதன்படி கோவிலில் நேற்று தைப்பூச விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு சாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன், விபூதி உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனையடுத்து அலங்கரிக்க பட்ட முருகபெருமான் வள்ளி, தெய்வானையுடன் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் காவடி எடுத்து தங்களது நேர்த்தி கடன் செலுத்தினர்.

இதேபோல் பையர்நத்தம் கிராமத்தில் மயிலை மலை மீது அமைந்துள்ள ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் தைப்பூச விழா நடந்தது. கோயிலின் அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அமிர்தேஸ்வரர், அன்னை ஸ்ரீ அமிர்தாம்பிகை கோவிலில், தை மாத பௌர்ணமியையொட்டி சாமிகளுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து 700-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மயிலை மலையை சுற்றி மேளதாளத்துடன் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்தனர். விழாக்குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

காரிமங்கலம்

காரிமங்கலம் முக்குளம் ஊராட்சிக்குட்பட்ட மொரசுபட்டி முருகன் கோவிலில் தைப்பூசத்தையொட்டி காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

இதேபோல் பூலாப்பட்டி ஆற்றங்கரையில் உள்ள முருகன் கோவில், சென்னம்பட்டி முருகன் கோவில், பந்தார அள்ளி முருகன் கோவில், காரிமங்கலம் மந்தை வீதி முருகன் கோவில் உள்பட பல்வேறு முருகன் கோவிலில் தைப்பூசத்தையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சந்தனகாப்பு உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் அலகு குத்தி கொண்டும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மாரண்டஅள்ளி

மாரண்டஅள்ளி பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சாமி கோவிலில் தைப்பூசத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. நேற்று காலை சாமிக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், குங்குமம், விபூதி, பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்பட 25-க்கும் மேற்பட்ட திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர் தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story