மோகனூர், வளையப்பட்டியில் கோவில் திருவிழாவையொட்டி தீ மிதித்த பக்தர்கள்


மோகனூர், வளையப்பட்டியில் கோவில் திருவிழாவையொட்டி தீ மிதித்த பக்தர்கள்
x
தினத்தந்தி 25 April 2023 12:15 AM IST (Updated: 25 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

மோகனூர்:

மோகனூர், வளையப்பட்டியில் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மாரியம்மன் திருவிழா

மோகனூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 10-ந் தேதி கம்பம் ஊன்றுதல், காப்புக்கட்டி தொடங்கியது. தொடர்ந்து பக்தர்கள் காவிரி ஆற்றில் நீராடி, புனித நீர் எடுத்து கம்பத்துக்கு ஊற்றி வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வடிசோறு பூஜை நடந்தது. நேற்று அதிகாலை 5 மணிக்கு அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தீ மிதித்து நேர்த்திக்கடன்

மாலை 3 மணிக்கு காவிரி ஆற்றுக்கு சென்று பக்தர்கள் புனித நீராடி, கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி, தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு மா விளக்கு பூஜை நடந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கிடா வெட்டுதல், இரவு 10 மணிக்கு கம்பத்தை பிடுங்கி காவிரி ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (புதன்கிழமை) மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

இதேபோல் மோகனூரை அடுத்த வளையப்பட்டி வள்ளுவர் நகரில் உள்ள செல்வ மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தீ மிதித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் சிலர் குழந்தைகளுடன் தீ மிதித்து, சாமி தரிசனம் செய்தனர்.


Next Story