சிவன்மலை சுப்பிரமணிய சாமி கோவில் படிக்கட்டுகளில் வெள்ளை வர்ணம்
சிவன்மலை சுப்பிரமணிய சாமி கோவிலில் பக்தர்களின் கோரிக்கையை தொடர்ந்து கோவில் படிக்கட்டுகளில் வெப்பத்தில் இருந்து பாதுகாக்க குளுமையாக இருக்க வெள்ளை வண்ணம்(கூலிங்பெயிண்ட்) அடிக்கப்பட்டது.
சிவன்மலை சுப்பிரமணிய சாமி கோவிலில் பக்தர்களின் கோரிக்கையை தொடர்ந்து கோவில் படிக்கட்டுகளில் வெப்பத்தில் இருந்து பாதுகாக்க குளுமையாக இருக்க வெள்ளை வண்ணம்(கூலிங்பெயிண்ட்) அடிக்கப்பட்டது.
சிவன்மலை கோவில்
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் கொங்குமண்டலத்தில் முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். மேலும் நாட்டில் வேறு எந்தக் கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது.
இந்த நிலையில் கோவிலுக்கு தினசரி காங்கயம், திருப்பூர், தாராபுரம், வெள்ளகோவில், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும், வெளி மாநில பகுதிகளில் இருந்து தினசரி அதிக அளவில் பக்தர்கள் வந்து சாமியை தரிசித்து செல்வது வழக்கம்.
வெண்மை வர்ணம்
இந்த நிலையில் காங்கயம் பகுதியில் கடந்த ஒரு மாதமாக கடும் வெயில் வட்டி எடுத்து வருகிறது. மேலும் தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்கி கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் படிக்கட்டிகளில் ஏறும்போது அதிக வெப்பத்தின் காரணமாக கால் சுடுவதால், படிக்கட்டுகளில் வெயிலுக்காக விரிக்கப்படும் சணல் விரிப்புகள் அல்லது வெள்ளை நிற குளுமை வர்ணம் (கூலிங் பெயிண்ட்) அடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த கோரிக்கையை தொடர்ந்து கோவில் படிக்கட்டுகள் மற்றும் சாமி தரிசனத்துக்காக வளாகப் பகுதிகளில் காத்திருக்கும் இடங்கள், கோவிலை சுற்றி வரும் இடங்கள் உள்ளிட்ட கோவிலின் பல்வேறு இடங்களில் கோவில் நிர்வாகம் சார்பில் வெள்ளை நிற குளுமை வர்ணம்(கூலிங் பெயிண்ட்) அடிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதன் வழியாக நடந்து சென்று சிரமம் இல்லாமல் சாமியை மகிழ்ச்சியுடன்தரிசித்து வருகின்றனர்.