ஆழித்தேர் கட்டுமானங்களை பிரிக்கும் பணிகள் தொடங்கியது


ஆழித்தேர் கட்டுமானங்களை பிரிக்கும் பணிகள் தொடங்கியது
x
தினத்தந்தி 11 April 2023 12:15 AM IST (Updated: 11 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேரோட்டம் முடிந்து 1 வாரம் கடந்த நிலையில் ஆழித்தேர் கட்டுமானங்களை பிரிக்கும் பணி தொங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

திருவாரூர்

திருவாரூர்;

தேரோட்டம் முடிந்து 1 வாரம் கடந்த நிலையில் ஆழித்தேர் கட்டுமானங்களை பிரிக்கும் பணி தொங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

திருவாரூர் தியாகராஜர் கோவில்

சைவ சமயத்தின் தலைமையிடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் திருவாரூர் தியாகராஜர் கோவில் உள்ளது.பிரசித்தி பெற்ற இந்த கோவிலின் ஆழித்தேர், ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமையை பெற்றது. திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழாவையொட்டி ஆழித்தேரோட்டம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். 96 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சி அளிக்கும் ஆழித்தேர், திருவாரூர் நகர வீதிகளில் அசைந்தாடி வரும் அழகு காண்போரின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் இருக்கும்.ஆழித்தேரை சீராக இயக்க திருச்சி பெல் நிறுவனம் மூலம் இரும்பு அச்சு மற்றும் 4 இரும்பு சக்கரங்களிலும் 'ஹைட்ராலிக் பிரேக்' பொருத்தப்பட்டுள்ளது.ஆழித்தேரின் முன்பகுதியில் 4 குதிரைகள், யாழி, பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேரின் மொத்த எடை 300 டன்னாக இருக்கும்.

தேர் கட்டுமானம் பிரிக்கும் பணிகள்

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் கடந்த 1-ந் தேதி நடந்தது. தேரோட்டத்தில் திருவாரூர் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் கீழவீதியில் புறப்பட்ட ஆழித்தேர் தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக சென்று மீண்டும் கீழவீதியில் நிலைக்கு வந்தது. 4 வீதிகளிலும் ஆழித்தேர் ஆடி, அசைந்து வந்தது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது.

போக்குவரத்து மாற்றம்

தேரோட்டம் முடிந்த பின்னர் கோவிலில் தினமும் பூஜைகள் நடந்தது. ஆழித்தேரோட்டம் முடிந்து விட்டதால் தேரின் கட்டுமானங்களை பிரிக்கும் பணிகள் நேற்று முன்தினம் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்று அலங்காரதுணிகள் பிரிக்கபட்டு பனஞ்சட்டங்களை பிரிக்கும் பணிகள் நடந்தது. இதில் ஏராளமான பணியாளர்கள் ஈடுபட்டனர். தேர் கட்டுமான பிரிக்கும் பணிகள் நடந்து வருவதால் வாகனங்கள் தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி வழியாக சென்று வரும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.


Next Story