ஆதிகும்பேஸ்வரர் கோவில் யானை நீச்சல் குளத்தில் உற்சாக குளியல்


ஆதிகும்பேஸ்வரர் கோவில் யானை நீச்சல் குளத்தில் உற்சாக குளியல்
x

கோடை வெயிலை சமாளிக்க நீச்சல் குளத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோவில் யானை உற்சாகமாக குளியல் போட்டு வருகிறது. இதை பக்தர்கள் கண்டு ரசித்து வருகிறார்கள்.

தஞ்சாவூர்

கோடை வெயிலை சமாளிக்க நீச்சல் குளத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோவில் யானை உற்சாகமாக குளியல் போட்டு வருகிறது. இதை பக்தர்கள் கண்டு ரசித்து வருகிறார்கள்.

யானை மங்களம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்திப்பெற்ற மங்களாம்பிகை உடனாகிய ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவிலுக்கு கடந்த 1982-ம் ஆண்டு காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகள், மங்களம் என்ற யானையை வழங்கினார். இந்த யானைக்கு தற்போது 57 வயதாகிறது. யானை மங்களத்துக்கு சளி தொந்தரவு இருப்பதால் தமிழக அரசின் சிறப்பு புத்துணர்வு முகாமிற்கு செல்லாமல் கோவில் வளாகத்திலேயே வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

புத்துணர்வு முகாமில் பிற யானைகளுக்கு வழங்கப்படுவதை போலவே உணவு, மூலிகைகள் கோவிலிலேயே யானை மங்களத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல யானைக்கு தேவையான உடற்பயிற்சிகளும் கோவில் வளாகத்திலேயே அளிக்கப்பட்டு வருகிறது.

நீச்சல் குளம்

யானை மங்களம் வெளியில் எங்கும் செல்லாததால் இயற்கை சூழலில் குளிக்க கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் ஏற்பாட்டின் படி கோவில் நந்தவனத்தின் தென்கிழக்கு பகுதியில் நீச்சல் குளம் கட்டுவதற்கு முடிவெடுக்கப்பட்டது. அதன்படி உபயதாரர்கள் மூலமாக ரூ.8 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் குளம் அமைக்கப்பட்டது.

கான்கிரீட் தளம், 8 அடி உயரத்தில் சுவர் மற்றும் 29 அடி நீள, அகலத்துடன் குளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் நான்கு பகுதிகளிலும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு, யானை மங்களம் நடைப்பயிற்சி மேற்கொள்ள வசதியாக குளத்தை 500 மீட்டருக்கு மண் நிரப்பப்பட்டு உள்ளது.

உற்சாக குளியல்

இந்த நிலையில் கோடைகாலம் தொடங்கி விட்டதால் கும்பகோணம் பகுதியில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க யானை மங்களத்தை அதன் பராமரிப்பாளரான அசோக் தினமும் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்துக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டி வருகிறார்.

நீச்சல் குளத்தில் இறங்கும் யானை மங்களம் பல மணிநேரம் அங்கேயே உற்சாகமாக குளித்து மகிழ்கிறது. அப்போது துதிக்கையால் தண்ணீரை உறிஞ்சி அதன் உடல் மீது வாரி இறைக்கிறது.

நீச்சல் குளத்தில் யானையின் சேட்டைகளை காண பக்தர்களும் ஆர்வமாக உள்ளனர். தினமும் குளத்தின் அருகே ஏராளமான பக்தர்கள் யானையின் வருகைக்காக காத்திருந்து, யானை குளிப்பதை கண்டு ரசித்து வருகிறார்கள்.


Next Story