தங்க காசுகளை திருடிய கோவில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம்
சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் போது தங்க காசுகளை திருடிய கோவில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் போது தங்க காசுகளை திருடிய கோவில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
உண்டியல் காணிக்கை
சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த பணியில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வங்கி ஊழியர்கள், கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். முன்னதாக உண்டியலில் இருந்த பணம், வெள்ளி, தங்க நகைகளை தனித்தனியாக பிரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில் செயல் அலுவலராக பணியாற்றி வரும் வெற்றிவேல் என்பவர் தங்க காசுகளை எடுத்து மறைத்து வைத்ததை கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட சிலர் பார்த்து இதுகுறித்து இணை ஆணையர் கல்யாணியிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரை, தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனையிட்டபோது, அவரிடம் இருந்த 30 கிராம் எடையுள்ள 5 தங்க காசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பணியிடை நீக்கம்
இதைத் தொடர்ந்து, இணை ஆணையர் கல்யாணி இந்த சம்பவம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், திருச்சி மண்டல இணை ஆணையர் ஆகியோரிடம் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து காணிக்கை எண்ணும் போது தங்க காசுகளை திருடிய திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் வெற்றிவேலை பணியிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் செல்வராஜ் நேற்று உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக எறும்பீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் வெற்றிவேல் மீது சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.