தஞ்சை உஜ்ஜையினி மாகாளிஅம்மன் கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி 2 ஆயிரம் பெண்களுடன் புனிதநீர் ஊர்வலம்


தஞ்சை உஜ்ஜையினி மாகாளிஅம்மன் கோவில் குடமுழுக்கையொட்டி 2 ஆயிரம் பெண்களுடன் புனிதநீர் ஊர்வலம் மேளதாளத்துடன் யானை, குதிரைகள் முன்செல்ல நடந்தது.

தஞ்சாவூர்

தஞ்சை உஜ்ஜையினி மாகாளிஅம்மன் கோவில் குடமுழுக்கையொட்டி 2 ஆயிரம் பெண்களுடன் புனிதநீர் ஊர்வலம் மேளதாளத்துடன் யானை, குதிரைகள் முன்செல்ல நடந்தது.

குடமுழுக்கு

தஞ்சை கீழவாசல் ஒட்டக்காரத்தெருவில் உஜ்ஜையினி மாகாளிஅம்மன் கோவில் உள்ளது. தஞ்சை நாடார்கள் உறவின்முறை தர்மபரிபாலன சங்கத்திற்கு பாத்தியப்பட்ட இந்த கோவிலின் மூலவர் சன்னதியின் இரு புறமும் உற்சவர் அம்மன், ஏனாதிநாயனார், வராகிஅம்மன், சிவதுர்க்கை அம்மன், சரஸ்வதி, லட்சுமி, கல்யாண கணபதி, வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர், அய்யப்பன், நாகம்மாள், ஆஞ்சநேயர், குபேரன், காலபைரவர், செல்வகணபதி ஆகிய 14 சன்னதிகள் உள்ளன.

இந்த கோவிலில் குடமுழுக்கு செய்ய முடிவு செய்யப்பட்டு, அதற்கான திருப்பணிகள் நிறைவடைந்துள்ளது. கோவில் குடமுழுக்கு வருகிற 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணிக்கு மேல் 10 மணிக்குள் நடக்கிறது. குடமுழுக்கு விழாவையொட்டி நேற்றுமுன்தினம் காலையில் விக்னேஸ்வர பூஜை, கணபதிஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. மாலையில் வாஸ்துசாந்தி பிரவேசபலி நடந்தது.

புனிதநீர் ஊர்வலம்

நேற்றுகாலை தஞ்சை சிவகங்கை பூங்கா குளத்தில் இருந்து புனிதநீர் ஊர்வலம் நடைபெற்றது. முதலில் சிவகங்கை பூங்கா குளத்தில் இருந்து குடங்களில் புனிதநீர் எடுக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் யானையின் மீது புனிதநீர் நிரப்பப்பட்ட கடம் வைக்கப்பட்டு, ஊர்வலம் புறப்பட்டது. யானையை தொடர்ந்து மஞ்சள் நிற புடவைகளுடன் 2 ஆயிரம் பெண்கள் குடங்களில் புனிதநீர் எடுத்து சென்றனர். செண்டைமேளம், தவில், நாதஸ்வரம் முழங்க, கால்களில் சலங்கைகட்டப்பட்ட குதிரை ஆடியபடி ஊர்வலம் சென்றனர்.

சிவகங்கை பூங்கா குளத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் மேலவீதி வழியாக பங்காரு காமாட்சி அம்மன்கோவிலை சென்றடைந்தது. அங்கு பூஜைகள் செய்யப்பட்டு, ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து கோவிலில் இருந்து புறப்பட்ட புனிதநீர் ஊர்வலம் வடக்குவீதி, கீழவீதி, கொண்டிராஜபாளையம், வெள்ளைப்பிள்ளையார்கோவில் வழியாக ஒட்டக்காரத்தெருவில் உள்ள உஜ்ஜையினி மாகாளிஅம்மன் கோவிலை சென்றடைந்தது. அங்கு புனிதநீர் நிரப்பப்பட்ட குடங்கள் வைக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டன. முன்னதாக கஜபூஜை, கோபூஜை, அஸ்வபூஜை நடைபெற்றது.

அன்னதானம்

உஜ்ஜையினி மாகாளிஅம்மன் கோவில் திருப்பணி கமிட்டி தலைவர் டி.வெள்ளைசாமி நாடார் தலைமையில் நடந்த புனிதநீர் ஊர்வலத்தில் இணை தலைவர் டி.ராமமூர்த்தி நாடார், செயலாளர்கள் ஆர்.ராமமூர்த்தி நாடார், துரையரசன் நாடார், சாமிராஜ் நாடார், செல்வக்குமார் நாடார், பொருளாளர் வெங்கடேஷ் நாடார், சட்ட ஆலோசகர் மாணிக்கவேல் பாண்டியன் நாடார், துணைச் செயலாளர்கள் ஸ்டாலின் பாண்டியன் நாடார், விஜயராஜன் நாடார், சோமசுந்தரம் நாடார், முருகேசன் நாடார், பாஸ்கரன் நாடார் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

புனிதநீர் ஊர்வலத்திற்கு பிறகு அன்னதானம் நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜை தொடங்குகிறது. தொடர்ந்து 6 கால யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான குடமுழுக்கு விழா வருகிற 10-ந் தேதி நடக்கிறது. விழாவில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட பல்வேறு முக்கியஸ்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை திருப்பணி கமிட்டியினரும், பக்தர்களும் செய்து வருகின்றனர்.


Next Story