கோவில் திருவிழா; 150 ஆடுகள், 300 கோழிகள் பலியிட்டு பக்தர்களுக்கு அசைவ விருந்து


கோவில்  திருவிழா; 150 ஆடுகள், 300 கோழிகள் பலியிட்டு பக்தர்களுக்கு அசைவ விருந்து
x

மதுரை அருகே முனியாண்டி கோவில் திருவிழாவையொட்டி 150 ஆடுகள், 300 கோழிகள் பலியிடப்பட்டு பக்தர்களுக்கு அசைவ விருந்து பரிமாறப்பட்டது.

மதுரை,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடக்கம்பட்டி கிராமத்தில் முனியாண்டிசுவாமி கோவிலில் 89-வது ஆண்டாக அசைவ பிரியாணி திருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர்.இந்நிலையில் விரதம் இருந்த பக்தர்கள் நேற்று முன்தினம் காலையில் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். தாங்கள் கொண்டு வந்த பாலை சுவாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

தமிழகம், ஆந்திரா, கேரளா மற்றும் பல்வேறு பகுதிகளில் முனியாண்டி விலாஸ் ஓட்டல் நடத்தி வருபவர்கள் மற்றும் உள்ளூர், வெளியூர் மக்கள் உள்பட ஏராளமானோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக, இந்த கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 150 ஆடுகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிடப்பட்டன. அந்த இறைச்சியுடன் 2,500 கிலோ பிரியாணி அரிசியில் அசைவ பிரியாணி அண்டா, அண்டாவாக தயார் செய்யப்பட்டது.

நேற்று காலையில் பிரியாணியை முனியாண்டி சுவாமிக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஏற்கனவே அண்டாக்களில் தயாராக வைக்கப்பட்டு இருந்த பிரியாணியை சுடச்சுட பக்தர்களுக்கு விருந்தாக அளிக்கப்பட்டது.இந்த அன்னதானத்தில் கள்ளிக்குடி, வில்லூர், அகத்தாபட்டி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமத்தினர் ஆயிரக்கணக்கானோர் தாங்கள் கொண்டு வந்த பாத்திரங்களில் பிரியாணியை பெற்றுச் சென்றனர். இந்த விழாவிற்கு வந்த பக்தர்கள், தங்களது பிள்ளைகளுக்கு வரன் பார்க்கும் படலமும் நடைபெறும் என பக்தர்கள் தெரிவித்தனர்.


Next Story