பழனி முருகன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம்


பழனி முருகன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம்
x

பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழாவில் பக்தர்களின் ‘அரோகரா' கோஷம் முழங்க முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது.

திண்டுக்கல்

பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழாவில் பக்தர்களின் 'அரோகரா' கோஷம் முழங்க முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது.

வைகாசி விசாக திருவிழா

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 6-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நேற்று இரவு நடைபெற்றது.

முன்னதாக நேற்று மாலை பெரியநாயகி அம்மன் கோவிலில் விநாயகர் பூஜை, சங்கல்பம், வருணபூஜை, பஞ்சகவ்யபூஜை, சுப்பிரமணியபூஜை, வேதபாராயணம், வாத்திய பூஜை நடைபெற்றது. அப்போது மணமேடையில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மணமேடைக்கு முன்பு பழங்கள், பட்டுச்சேலை, பட்டுவேட்டி, திருமாங்கல்யம், வண்ணமலர்கள், இனிப்புகள் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

'அரோகரா' கோஷம்

பின்னர் பொற்சின்னம் இடித்தல் நிகழ்ச்சி, சிறப்பு அலங்காரம், ஆராதனை, கன்னிகா தானம், மாங்கல்ய பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் வள்ளி-தெய்வானைக்கு திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் 'அரோகரா' கோஷம் எழுப்பி வழிபட்டனர்.

மாங்கல்யம் அணிவித்தலை தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் ரட்சை சாற்றுதல், 16 வகை உபசாரம், வேதபாராயணம், திருமுறை பாராயணம், மகா தீபாராதனை நடந்தது. அதன்பிறகு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருமணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருமணம், பூஜை நிகழ்ச்சிகளை கோவில் குருக்கள் செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் குமார், கண்காணிப்பாளர் அழகர்சாமி, கண்பத் கிராண்ட் ஹரிகரமுத்து, அரிமா சுந்தரம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இன்று தேரோட்டம்

திருவிழாவின் 7-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெறுகிறது. முன்னதாக பகல் 9 மணிக்கு மேல் திருத்தேரேற்றம் நடக்கிறது. பின்னர் மாலை 4.15 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு பெரிய தந்தப்பல்லக்கில் தேர் பார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.


Related Tags :
Next Story