பழனி முருகன் கோவிலில் கார்த்திகை உற்சவ விழா; ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
பழனி முருகன் கோவிலில் கார்த்திகை உற்சவ விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் கார்த்திகை உற்சவ விழா நடைபெற்று வருகிறது. இந்த மாதத்துக்கான (ஆனி) கார்த்திகை உற்சவ விழா இன்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. பின்னர் 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமானுக்கு சந்நியாசி அலங்காரமும், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரமும் நடைபெற்றது.
தொடர்ந்து 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரம், பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையில் வைதீகாள் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜ அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் இரவு 9 மணிக்கு ராக்கால பூஜையில் பல்வேறு வண்ண மலர்களால் சுவாமிக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டது.
கார்த்திகை உற்சவத்தையொட்டி பழனி முருகன் கோவிலில் தர்ம தரிசனம், சிறப்பு தரிசனத்துக்கு கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மேலும் நேற்று அதிகாலை முதலே கேரளா மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர். இதனால் தரிசன வழிகள், மலைக்கோவிலுக்கு செல்வதற்கான மின்இழுவை ரெயில்நிலையம் ஆகிய இடங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.
மாலை 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் உட்பிரகாரத்திலும், 7 மணிக்கு மேல் தங்கரதத்திலும் சின்னக்குமாரர் எழுந்தருளினார். அப்போது சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதையடுத்து தங்கரத புறப்பாடு நடந்தது. இதில் 189 பக்தர்கள் தலா ரூ.2 ஆயிரம் செலுத்தி கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பழனி கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர்.