அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா; 17-ந்தேதி கண் திறப்பு நிகழ்ச்சி


அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா; 17-ந்தேதி கண் திறப்பு நிகழ்ச்சி
x

அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழாவையொட்டி 17-ந்தேதி கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

திண்டுக்கல்

அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழாவையொட்டி 17-ந்தேதி (திங்கட்கிழமை) அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

முத்தாலம்மன் கோவில்

திண்டுக்கல் அருகே அகரத்தில் பிரசித்திபெற்ற முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான திருவிழா 9-ந்தேதி இரவு சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜை மற்றும் கலை நிகழ்ச்சிகள், புராண நாடகங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் அம்மனின் பண்டார பெட்டி மற்றும் உற்சவர் கொலு மண்டபத்திற்கு எழுந்தருளல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

கண் திறப்பு நிகழ்ச்சி

இந்தநிலையில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக அம்மனின் கண் திறப்பு, 17-ந்தேதி (திங்கள்கிழமை) காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது. பின்னர் அம்மன் ஆயிரம் பொன் சப்பரத்தில் உலா வந்து, கொலு மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.

அப்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். அன்றைய தினம் இரவு 12 மணி வரை பக்தர்களுக்கு தரிசனம் அளித்துவிட்டு, அம்மன் அங்கிருந்து புஷ்ப விமானத்தில் புறப்பட்டு வான காட்சி மண்டபத்திற்கு எழுந்தருளுவார். அப்போது வாணவேடிக்கை நடைபெறும். மறுநாள் மதியம் அம்மன் வான காட்சி மண்டபத்தில் இருந்து புறப்பாடாகி, சொருகு பட்டை சப்பரத்தில் பூஞ்சோலைக்கு வருவார். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.

ஏற்பாடுகள்

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை நிர்வாக அறங்காவலர் மாரிமுத்து தலைமையில் விழாக்குழுவினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் செய்து வருகின்றனர். குடிநீர் மற்றும் சுகாதார பணிகளை அகரம் பேரூராட்சி தலைவர் நந்தகோபால், துணைத்தலைவர் ஜெயபால், செயல் அலுவலர் ஈஸ்வரி, தாடிக்கொம்பு பேரூராட்சி தலைவர் கவிதா சின்னத்தம்பி, துணைத்தலைவர் நாகப்பன், செயல் அலுவலர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் 2 பேரூராட்சிகளின் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.



Related Tags :
Next Story