ஆகாச மாரியம்மன் கோவிலில் பெரிய திருவிழா


ஆகாச மாரியம்மன் கோவிலில் பெரிய திருவிழா
x
தினத்தந்தி 5 Jun 2023 12:15 AM IST (Updated: 5 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாச்சியார்கோவில் ஆகாசமாரியம்மன் கோவிலில் பெரிய திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தஞ்சாவூர்

நாச்சியார்கோவில் ஆகாசமாரியம்மன் கோவிலில் பெரிய திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஆகாசமாரியம்மன் கோவில்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலில் பிரசித்திப்பெற்ற ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு அம்மனுக்கென்று தனி சன்னதி கிடையாது. ஆண்டு முழுவதும் அகல் விளக்கு தீபமாக காட்சி தரும் அம்மனுக்கு வைகாசி மாதத்தில் 13 நாட்கள் நடைபெறும் திருவிழா பிரசித்திப்பெற்ற திருவிழாக்களுள் ஒன்றாகும்.

பல்வேறு சிறப்புகள் பெற்ற நாச்சியார் கோவில் ஆகாசமாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு வைகாசி திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் (மே) 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு சமயபுரத்திலிருந்து அம்மன் கோவிலுக்கு புஷ்ப பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 27-ந் தேதி வீற்றிருந்த திருக்கோலத்திலும், 28-ந் தேதி தஞ்சாவூர் மகாராஜாவால் விருது அளிக்கப்பட்ட லட்சுமி அலங்காரத்திலும், 29-ந் தேதி சரஸ்வதி அலங்காரத்திலும் ஆகாசமாரியம்மன் அருள்பாலித்தார்.

பெரிய திருவிழா

30-ந் தேதி மதன கோபால அலங்காரத்திலும், 31-ந் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்திலும், 1-ந் தேதி சேஷ சயன அலங்காரத்திலும், 2-ந் தேதி அம்பாள் அந்தம் வரை வளர்ந்து ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் ஏகாந்த வைபவத்தையொட்டி ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.

விழாவின் 9-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று பெரிய திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று இரவு வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தல் உள்பட பல்வேறு விதமான நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

போக்குவரத்து மாற்றம்

நாச்சியார்கோவில் வீதிகள் அனைத்தும் பக்தர்கள் தலைகளாக காட்சி அளித்தது. இதன் காரணமாக வாகன போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து தொட்டில் கட்டியும், பாடை காவடி எடுத்தும், அலகு காவடி எடுத்தும் பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நள்ளிரவு வரை பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இன்று (திங்கட்கிழமை) மற்றும் நாளை (செவ்வாய்க்கிழமை) ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ஆகாசமாரியம்மன் அருள் பாலிக்கிறார். 7-ந் தேதி (புதன்கிழமை) இரவு தேரில் அம்பாள் சமயபுரத்துக்கு எழுந்தருள்கிறார். அப்போது நின்ற திருக்கோலத்தில் வெள்ளிக்குடம் சுமந்தவாறு சமயபுரம் புறப்படுகிறார். வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணிக்கு விடையாற்றி விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அறங்காவலர் துரை. சீனிவாசன் அறங்காவலர்கள் டாக்டர்.எஸ். கோபாலகிருஷ்ணன், டி. ராஜு மற்றும் புராதன கவரையர்கள் செய்து வருகின்றனர்.


Next Story