மானாமதுரையில் கோவில் திருவிழா: ஆண்கள் மீது மஞ்சள் தண்ணீர் ஊற்றிய பெண்கள்
மானாமதுரையில் கோவில் திருவிழாவையொட்டி ஆண்கள் மீது பெண்கள் மஞ்சள் தண்ணீர் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மானாமதுரை,
மானாமதுரையில் கோவில் திருவிழாவையொட்டி ஆண்கள் மீது பெண்கள் மஞ்சள் தண்ணீர் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மஞ்சள் தண்ணீர் ஊற்றும் நிகழ்ச்சி
நடிகர் கமலஹாசன், நடிகை ஸ்ரீதேவி நடித்த 16 வயதினிலே படத்தில் ஒரு பாடல் காட்சி வரும். அந்த பாடல் காட்சியில் "மஞ்சள் குளிச்சி அல்லி முடிச்சு, மெட்டி ஒலிக்க மெல்ல சிரிச்சு, என்சோட்டு செண்டுகளே, இளவாள தண்டுகளே, வாழை குருத்துகளே, மாமன் மச்சான தேடி புடிங்க" என்ற பாடல் வரும். இந்த பாடலில் இளம் பெண்கள் தங்களது முறை மாமன் மற்றும் மச்சான்கள் மீது மஞ்சள் தண்ணீர் ஊற்றி மகிழ்வது போன்று இருக்கும். இவ்வாறான கிராமத்து பழக்க வழங்கங்களை தற்போது நாம் சினிமாவில்தான் பார்க்க முடிகிறது. ஆனால் மானமதுரையில் இந்த பாரம்பரிய விழாவை இன்று வரை கொண்டாடி வருகின்றனர்.
இந்த மஞ்சள் தண்ணீர் ஊற்றும் நிகழ்ச்சி மானாமதுரை கன்னார் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழாவில் நடைபெற்றது. இந்த விழா கடந்த ஒருவாரத்திற்கு முன்பு காப்புக்கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. இதையடுத்து பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் இருந்து வந்த நிலையில் பொங்கல் விழா அன்று மானாமதுரை வைகையாற்றில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம், பறவை காவடி, அலகு குத்துதல், பூக்குழி இறங்குதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தினர். மேலும் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மாமன், மச்சான்கள்
விழாவையொட்டி நேற்று காலை மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இதையடுத்து அம்மனுக்கு மஞ்சளால் அபிஷேகம் செய்யப்பட்ட மஞ்சள் தண்ணீரை அப்பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களது மாமன், மச்சான் மீதும், ஆண்கள் தங்களது முறைபெண்கள் மீது ஊற்றும் விழா நடைபெற்றது. அப்போது பெண்களும், ஆண்களும் வீடுகளில் இருந்து வெளியே வந்து தங்களது மாமன், மச்சான் மற்றும் முறைபெண்கள் மீது ஓடி, ஓடி சென்று அவர்களின் தலையில் மஞ்சள் தண்ணீர் ஊற்றி மகிழ்ந்தனர்.
இதேபோல் சில இளைஞர்கள் தங்களது வீடுகளில் மறைந்திருந்த போதிலும் அதை ரகசியமாக கண்டுபிடித்த அவர்களின் முறைப்பெண்கள் அங்கு சென்று அவர்களின் தலையில் மஞ்சள் தண்ணீரை ஊற்றி மகிழ்ந்தனர். மாமன், மச்சான் முறை கொண்ட ஆண்களும் ஒருவருக்கொருவர் முகத்தில் மஞ்சளை பூசிக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதன் மூலம் மாமன், மச்சான் மற்றும் முறை பெண்கள் ஆகியோரது சொந்த பந்த வாழ்க்கை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. நேற்று நடைபெற்ற இந்த விழாவையொட்டி அந்த பகுதி முழுவதும் மஞ்சள் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிகழ்ச்சியையொட்டி அப்பகுதியே கலகலப்பாக இருந்தது.