அவினாசிலிங்கேசுவார் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பராமரிப்புப்பணிகள் தீவிரம்


அவினாசிலிங்கேசுவார் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பராமரிப்புப்பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 2 July 2023 9:54 PM IST (Updated: 3 July 2023 2:23 PM IST)
t-max-icont-min-icon

அவினாசிலிங்கேசுவார் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பராமரிப்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர்

அவினாசி லிங்கேசுவரர் கோவில்

அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், காசிக்கு நிகரானது என பல்வேறு சிறப்புகளைப் பெற்ற 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. தமிழகம் மற்றும் பல்வேறுமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள். தமிழ்நாட்டில் 3-வது பெரிய தேர் உடைய கோவில் என்ற சிறப்பு பெற்றது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா விமர்சையாக நடைபெறும். அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வாரம் பிடித்து இழுப்பது வழக்கம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவில் கும்பாபிஷேகம் நடந்து15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. எனவே பக்தர்களும், ஆன்மிகச் சான்றோர்களும் கோவில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த வேண்டும் என இந்து அறநிலையத்துறைக்கு கோரிக்கை வைத்தனர்.

புனரமைப்பு

அதன்படி கோவில் நிர்வாகத்தின் மூலம் கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதனை தொடர்ந்து அரச மரத்தடி விநாயகர் பீடம் மராமத்து செய்தல், சுவாமி சன்னதி விமானம் மாறாமல் செய்து பஞ்சவர்ணம் பூசுதல், அம்மன் சன்னதி விமானம் மராமத்து செய்து பஞ்சவர்ணம் பூசுதல், சூரியன் சன்னதி விமானம் மாறாமல் செய்து தஞ்சை காரணம் பூசுதல், பழைய கட்டுமானங்களின் மேல் உள்ள புதிய சிமெண்டு கட்டுமானங்களை அகற்றுதல் பணி நடைபெற்று வருகிறது.

அம்மன் சன்னதி முன்புறம் கல்வெட்டுகளை மறைத்து கட்டப்பட்டுள்ள சிங்கமுக படிக்கட்டுகளை அகற்றுதல், நுழைவு மண்டபத்தில் துணை சுற்றி கட்டப்பட்டுள்ள கட்டுமானத்தை அகற்றுதல், வடக்கு பிரகார திருமாழிக ஒபத்திமண்டப அடைப்புகளை அகற்றுதல், திருக்கல்யாண மண்டபத்திற்கும், சிவன் சன்னதி சுற்றுச்சூழுக்கும் இடையில் உள்ள சிமெண்டு தரைதளத்தை அகற்றுதல் பணிகள் நடைபெறுகிறது.

பஞ்சவர்ணம்

நடராஜர் சன்னதி சிமெண்டு படிக்கட்டுகளை அகற்றுதல்,சிவன் சன்னதி உள்பிரகாரம் கல்வெட்டுகள் தெரியும் வண்ணம் செய்தல், 5 நிலை ராஜகோபுரம் மராமத்து செய்து பஞ்சவர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. இதற்கான செலவினங்கள் உபயதாரர்களிடம் இருந்து வரவேற்கப்படுவதாகவும், கோவில் திருப்பணிகள் முடிவு பெற்று அதன் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக கோவில்நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


Next Story