பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்

பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கும்பாபிஷேகம்
உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கடந்த மாதம் 25-ந்தேதி பழனி மலைக்கோவிலில் கும்பாபிஷேக பணிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது. இந்தநிலையில் கும்பாபிஷேகத்துக்கு சில வாரங்களே உள்ளதால் கோவிலில் திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கோபுரங்களில் வர்ணம் பூசும் பணிகள் ஏறக்குறைய முடிந்துவிட்டது.
அதே நேரத்தில் கோவில் மற்றும் அதன் சார்ந்த அனைத்து மண்டபங்களிலும் முருகப்பெருமானின் சிறப்பை விளக்கும் வகையிலான ஓவியங்கள் வரைதல், கோபுர கலசம், தங்கம் சார்ந்த அனைத்து பொருட்களை செப்பனிட்டு அதில் தங்க 'ரேக்' ஒட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி கோவில் ராஜகோபுர கலசங்கள், தங்கமயில் வாகனம் ஆகியவற்றுக்கு தங்க 'ரேக்' ஒட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பணிகள்
மேலும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வருகிற 18-ந்தேதி புதன்கிழமை காலை 9 மணிக்கு கணபதி பூஜையுடன் பூர்வாங்க பூஜைகள் நடைபெறுகிறது. 23-ந்தேதி மாலையில் முதற்கால யாகம் தொடங்குகிறது.
இதற்காக கோவில் கார்த்திகை மண்டபத்தில் யாகசாலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. மேலும் நாயக்கர் மண்டபத்தில் 3 பழைய தூண்கள் மாற்றப்பட்டு புதிய தூண்கள் நிறுப்பட உள்ளது. அந்த வகையில் பழனியில் கும்பாபிஷேகத்துக்கான அனைத்து திருப்பணிகளும் இரவும், பகலுமாக நடைபெற்று வருவதால் கோவில் வண்ணமயமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






