சந்திர கிரகணத்தையொட்டி கோவில்களில் நடை அடைப்பு


சந்திர கிரகணத்தையொட்டி கோவில்களில் நடை அடைப்பு
x

சந்திர கிரகணத்தையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நடை அடைக்கப்பட்டது.

திண்டுக்கல்

சந்திர கிரகணத்தையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நடை அடைக்கப்பட்டது.

சந்திர கிரகணம்

சூரிய, சந்திர கிரகண நாட்களில் கோவில்களில் நடை அடைக்கப்படுவதும், கிரகண நிறைவுக்கு பின் கோவில்களில் பரிகார பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதும் வழக்கம். அதன்படி பவுர்ணமி நாளான இன்று சந்திர கிரகணம் ஏற்பட்டது. இதையொட்டி திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் பகல் 12.15 மணி அளவில் நடை அடைக்கப்பட்டது. அதன்பிறகு மாலையில் கோவில் முழுவதும் கழுவி சுத்தம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கணபதி ஹோமம் செய்யப்பட்டு அம்மனுக்கு பால், பழம், பன்னீர் உட்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்று பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் காலை 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மாலையில் கோவில் முழுவதும் கழுவி சுத்தம் செய்யப்பட்டு 6.30 மணி அளவில் நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் சந்திர கிரகணத்தையொட்டி திண்டுக்கல் நாகல்நகர் ரெயிலடி சித்தி விநாயகர் கோவில், புவனேஸ்வரி அம்மன் கோவில், சவுந்திரராஜ பெருமாள் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து கோவில்களும் நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜைகளுக்கு பின் நடை திறக்கப்பட்டது.

பழனி முருகன் கோவில்

இதேபோல் உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் இன்று நண்பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை நடைபெற்றது. பின்னர் பிற்பகல் 2.30 மணிக்கு மலைக்கோவில், திருஆவினன்குடி கோவில் மற்றும் உபகோவில்கள் அனைத்திலும் நடை சாத்தப்பட்டது. சந்திரகிரகணம் முடிந்த பின்பு இரவு 7 மணிக்கு மேல் சம்ரோஷன பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கோவில்கள் சுத்தம் செய்யப்பட்டு, நடைதிறக்கப்பட்டது. அதன்பிறகு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மலைக்கோவிலில் தங்கரத புறப்பாடு, சாயரட்சை பூஜை, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

சந்திர கிரகணத்தையொட்டி பழனி மலைக்கோவிலுக்கு இயக்கப்படும் ரோப் கார் மற்றும் மின்இழுவை ரெயில் சேவை நேற்று காலை 11.30 மணிக்கு நிறுத்தப்பட்டது. பின்னர் இரவு 7 மணிக்கு மேல் மீண்டும் அவை இயக்கப்பட்டன.

1 More update

Related Tags :
Next Story