வால்பாறையில் கோவில்கள், பொதுஇடங்களில் பிரதிஷ்டை செய்ய 108 விநாயகர் சிலைகள் தயார்


வால்பாறையில் கோவில்கள், பொதுஇடங்களில் பிரதிஷ்டை செய்ய 108 விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் கோவில்கள், பொதுஇடங்களில் பிரதிஷ்டை செய்ய 108 விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

108 விநாயகர் சிலைகள்

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணியினர் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதன்படி வால்பாறை தாலுகா பகுதியில் நகர் பகுதி மற்றும் எஸ்டேட் பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களிலும், பொது இடங்களிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் நடத்துவது வழக்கம். இதற்காக இந்த ஆண்டு மொத்தம் 108 விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு பக்தர்களுக்கு வினியோகம் செய்யும் பணி நேற்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் 4-ந் தேதி காலை வரை நடத்தப்படுகிறது. இதையடுத்து அன்று மதியம் அனைத்து சிலைகளையும் ஊர்வலமாக வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு எடுத்து வந்து சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. பின்னர் மீண்டும் ஊர்வலமாக எடுத்துச் சென்று நடுமலை ஆற்றில் விநாயகர் சிலைகள் அனைத்தும் விஜர்சனம் செய்யப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை வால்பாறை இந்து முன்னணியினர் செய்து வருகின்றனர். வால்பாறை உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு கீர்த்திவாசன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் மேற்பார்வையில் வால்பாறை, காடம்பாறை, முடீஸ், சேக்கல்முடி ஆகிய போலீஸ் நிலையங்களை சேர்ந்த சப் -இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


Next Story