நிலத்தின் மொழியை வாழ வைக்கும் கருவியாக கோவில்கள் விளங்குகின்றன-மதுரை ஐகோர்ட்டு உத்தரவில் பரபரப்பு கருத்துகள்


நிலத்தின் மொழியை வாழ வைக்கும் கருவியாக கோவில்கள் விளங்குகின்றன-மதுரை ஐகோர்ட்டு உத்தரவில் பரபரப்பு கருத்துகள்
x

திருச்செந்தூர் கோவில் பிரகாரங்களில் தங்கவும், யாகம் நடத்துவதற்கும் தடை நீட்டிக்கப்படுகிறது எனவும், நிலத்தின் மொழியை வாழ வைக்கும் கருவியாக கோவில்கள் விளங்குகின்றன என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை

திருச்செந்தூர் கோவில் பிரகாரங்களில் தங்கவும், யாகம் நடத்துவதற்கும் தடை நீட்டிக்கப்படுகிறது எனவும், நிலத்தின் மொழியை வாழ வைக்கும் கருவியாக கோவில்கள் விளங்குகின்றன என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்த சஷ்டி விழா

தூத்துக்குடி மாவட்ட பா.ஜ.க. செயலாளர் சித்ரங்கதன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி, கோவிலில் உள்பிரகாரத்தில் பக்தர்கள் தங்கி விரதம் இருக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, கோவில்களில் முக்கிய பிரகாரங்களில் யாகம் உள்ளிட்ட எந்த நிகழ்வுகளுக்கும் அனுமதி வழங்கக்கூடாது என்று நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

இந்தநிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

தனித்துவமானதும், கலை நயத்துடன் கூடியதுமானதுமான பழமையான, தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பெரிய கோவில்களைக் கொண்டது தமிழ்நாடு மண். அவை வழிபாடு செய்வதற்கான இடங்கள் மட்டுமல்ல, சிற்பங்கள், சிலைகள், ஓவியங்கள், சுவர் ஓவியங்கள் மற்றும் இசை வடிவங்களில் அசாதாரண கலைகளை வெளிப்படுத்திய இடங்கள்.

வரலாறை பிரதிபலிக்கின்றன

அவை புராணங்கள் எனப்படும் வரலாற்று நிகழ்வுகளை பிரதிபலிக்கின்றன. அதுமட்டுமல்லாமல், இந்த நிலத்தின் மொழியை வாழ வைக்கும் கருவியாகவும் உள்ளன. ஒவ்வொரு பழங்கால கோவிலிலும் தெய்வத்தை போற்றி பாடல்கள் ஓதுதல், திருமுறைகள் ஓதுதல், வேத பாடல்கள், நடனம், நாடகம், நாட்டுப்புறக் கதைகள், விவாதங்கள் ஆகியவற்றிற்காக தனி இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. சமூகம் மற்றும் நாகரிகத்தின் வளர்ச்சியில் கோவில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இங்கு தேவையற்ற நிகழ்வுகளும் நடக்கின்றன.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டியையொட்டி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு 18 தற்காலிக இடங்களில் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கோவில் பிரகாரங்களில் தேவையில்லாத நடவடிக்கைகளை தவிர்க்கும் வகையில் பக்தர்கள் விரதம் இருக்க அனுமதிக்கப்படவில்லை.

தடை நீடிக்க வேண்டும்

மேலும் யாகம் போன்றவை நடத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது என்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை இந்த கோர்ட்டு ஏற்கிறது. எந்த பாகுபாடும் இல்லாமல் அமைதியான முறையில் தெய்வ வழிபாடு இருப்பது அவசியம். அந்த வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் பிரகாரங்களில் பக்தர்கள் தங்குவது, யாகங்கள் போன்றவற்றிற்கு தடை விதித்துள்ளதை தொடர்ச்சியாக நீட்டிக்க வேண்டும்.

ரூ.300 கோடி மதிப்பில் மாஸ்டர் பிளான் திட்டம் தொடர்பான பணிகள் நடந்து வருகின்றன என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவல் நம்பிக்கையை அளிக்கிறது. இந்த தொகையை நியாயமாக பயன்படுத்தி, பணிகளை விரைவாக முடிக்கவும், இந்த பணிகளால் பக்தர்கள் பயனடைவதை உறுதிசெய்யவும் வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Related Tags :
Next Story