கோவில்களை தொல்லியல் சின்னங்களாக பாதுகாக்க வேண்டும்


கோவில்களை தொல்லியல் சின்னங்களாக பாதுகாக்க வேண்டும்
x

அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளத்தில் உள்ள கோவில்களை தொல்லியல் சின்னங்களாக பாதுகாக்க வேண்டும் என ராமநாதபுரத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வு மாணவி சிவரஞ்சனி அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

விருதுநகர்


அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளத்தில் உள்ள கோவில்களை தொல்லியல் சின்னங்களாக பாதுகாக்க வேண்டும் என ராமநாதபுரத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வு மாணவி சிவரஞ்சனி அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

அர்த்த மண்டபம்

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

தற்போது கோவிலாங்குளம் என்று அழைக்கப்படும் இந்த ஊர் வெண்பு வளநாட்டு செங்காட்டிருக்கை கும்பலூரான் குண கணாபரண நல்லூர் என கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஊரின் தெற்கு பகுதியில் கோவில் போன்ற அமைப்பின் கருவறையில் அர்த்த மண்டபமும் உள்ளே பெரிய மேடை போன்ற இடத்தில் அமர்ந்த நிலையில் 3 சிற்பங்கள் உள்ளன. இதில் தெற்கில் 24-ம் தீர்த்தங்கரர் மகாவீரரும், வடக்கில் முக்குடைகளின் கீழ் ஒரு தீர்த்தங்கருணம் நடுவில் சுருள்முடியுடன் ஒரு தீர்த்தங்கரரும் உள்ளனர். இதை அம்பலப்ப சாமி கோவில் என்கிறார்கள்.

12-ம் நூற்றாண்டு

இங்கு கி.பி. 12-ம் நூற்றாண்டை சேர்ந்த முதலாம் குலோத்துங்க சோழனது கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் ஒன்று முக்குடையாரோன சைனர்களுக்கு திருமண்டபம் செம்பொன் திவ்ய விமானம் செய்து திருக்கோவில் அமைந்ததாக சொல்கிறது. இதன் பராமரிப்புக்காக நிலங்களும், கிணறும், நறுந்தண்ணீர் பந்தலும் அமைத்துக் கொடுத்துள்ளனர்.

மற்ற இரு கல்வெட்டுகளில் சில ஊர் பெயர்களும், அதிகாரிகள் பெயர்களும் வருணனையுடன் வருகிறது. இது கி.பி. 12-ம் நூற்றாண்டுகளில் தமிழர்களின் பெயர் வைக்கும் வழக்கத்தை அறிய உதவுகிறது. ஊருக்கு அருகில் புல்லூர், தொப்பவாக்கரை, குரண்டி ஆகிய ஊர்களில் சமணபள்ளி இருந்துள்ளது, ஆனால் இங்கு பள்ளி என்று சொல்லே கல்வெட்டில் வராததும், திருக்கோவில் என அழைக்கப்பட்டுள்ளதும் ஆச்சரியமாக உள்ளது.

பெருமாள் கோவில்

இங்குள்ள பெருமாள் கோவிலில் 4 கல்வெட்டுகள் உள்ளன. இதில் 3 குலசேகர பாண்டியனுடையது. இங்குள்ள கல்வெட்டுகள் இந்த ஊர் கோவிலுக்கு கொடையாக 100 குழி நிலம் வழங்கியதை தெரிவிக்கின்றன.

பழமையான இந்த கோவில் புல் பூண்டு முளைத்து ஆங்காங்கே கற்களெல்லாம் இடிந்து விழுந்து சேதமடைந்த நிலையில் உள்ளன. கருவறையும், அர்த்தமண்டபமும் தான் சேதமடைந்த நிலையில் மிஞ்சியுள்ளது. மகா மண்டபத்தில் அடித்தளத்தை மட்டுமே காண முடிகிறது. சிற்பங்களோடு உள்ள தூண்கள் கோவில் அருகில் உடைந்து கிடக்கின்றன. கோவில் கிணறு குப்பை மேடாக காட்சியளிக்கிறது.

தொல்லியல் சின்னம்

சோழபாண்டிய மன்னர்களது கல்வெட்டு ஆதாரத்துடன் நீண்டதொரு வரலாற்றை தனக்குள் கொண்டுள்ள கோவிலாங்குளத்தில் உள்ள சமண, வைணவ கோவில்களை தொல்லியல் துறையினர் புனரமைத்து தொல்லியல் சின்னமாக பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story