டெம்போ-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
நாகர்கோவிலில் டெம்போ-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
நாகர்கோவில்,
நாகர்கோவில் வடசேரி கட்டயன்விளை பகுதியை சேர்ந்தவர் எட்வா்ட் சாமுவேல் அஜின் (வயது 35), பி.ஏ. பட்டதாரி. இவர் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார். அவர் வெட்டூர்ணிமடம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே ஒரு டெம்போ வேகமாக வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளும், டெம்போவும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற எட்வர்ட் சாமுவேல் அஜின் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து எட்வா்ட் சாமுவேல் அஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் பலியான எட்வர்ட் சாமுவேல் அஜினுக்கு திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-----