அரியலூரில் இன்று முதல் தற்காலிக பஸ் நிலையம்
அரியலூரில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தற்காலிக பஸ் நிலையம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் பஸ் நிலையம்
அரியலூர் நகராட்சிக்கு சொந்தமான சிவபெருமாள் நினைவு பஸ் நிலையம் கடந்த 1975-ம் ஆண்டு கட்டப்பட்டது. அதன் பிறகு 2 முறை விரிவாக்கம் செய்யப்பட்டது. 47 ஆண்டுகள் ஆனதால் இந்த கட்டிடங்கள் இடிந்து விழ ஆரம்பித்தன. இதையடுத்து, பழைய கட்டிடத்தை முழுமையாக இடித்து விட்டு புதிய பஸ் நிலையம் கட்ட தமிழக அரசு ரூ.7½ கோடி ஒதுக்கியது. இந்த பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை காலி செய்து தருமாறு நகராட்சி நிர்வாகம் பலமுறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும், நேரில் வந்து கூறியும் யாரும் கடைகளை காலி செய்யவில்லை.
தற்காலிக பஸ் நிலையம்
இந்தநிலையில் பஸ் நிலையத்தில் கட்டுமான பணிகள் தொடங்கின. இடிந்து விடும் நிலையில் உள்ள சமுதாய கூடத்தை பொக்லைன் எந்திரம் கொண்டு இடிக்கும் பணிகள் தொடங்கியது. மேலும், கட்டுமான பணிகளுக்காக இரும்பு கம்பிகள், சிமெண்டு மூட்டைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதையடுத்து, அரியலூர் பஸ்நிலைய கட்டுமான பணிகள் நிறைவடையும் வரை தற்காலிக பஸ் நிலையம் அரியலூர் புறவழிச்சாலையில் வாணி மஹாலின் எதிர்புறம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் செயல்படவுள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் பயணிகள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.