தோட்ட தொழிலாளர்கள் உள்பட 10 பேர் படுகாயம்


தோட்ட தொழிலாளர்கள் உள்பட 10 பேர் படுகாயம்
x
தேனி

கம்பம் கோம்பை ரோடு தெருவை சேர்ந்தவர் ஆசைபிரபு (வயது 28). இவர் ஜீப்பில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மாலி பகுதியில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு தொழிலாளர்களை ஏற்றி செல்வது வழக்கம். அதன்படி இவர், கம்பம் உலகத்தேவர் தெருவை சேர்ந்த மகேஷ்வரி (வயது 36), சசிகலா (31), புதுப்பட்டியை சேர்ந்த சுகந்தி (31), ராணி (40), கோம்பை ரோடு தெருவை சேர்ந்த பேச்சியம்மாள் (57), வனத்தாய் (55), சிங்கரம்மாள் (60) ஆகிய 7 தொழிலாளர்களை கேரளாவுக்கு வேலைக்கு ஜீப்பில் அழைத்து சென்று ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது கம்பம்- தேனி புறவழிச்சாலையில் மணிகட்டி ஆலமரம் பிரிவில் வாகனத்தை திருப்பியபோது, பின்னால் தேனி சமதர்மபுரத்தை சேர்ந்த கோபி ரமேஷ் (47) என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக ஜீப் மீது மோதியது. இதில் ஜீப் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த டிரைவர் ஆசைபிரபு, மகேஷ்வரி, சசிகலா உள்பட 8 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் மகேஷ்வரி, சசிகலாவை மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் காரில் வந்த தேனி கொடுவிலார்பட்டியை சேர்ந்த பொன்முடி (58), உமாமகேஷ்வரி (52) ஆகியோரும் படுகாயமடைந்தனர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story