100 மின்சார பஸ்கள் வாங்க டெண்டர்; போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்


100 மின்சார பஸ்கள் வாங்க டெண்டர்; போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
x

100 மின்சார பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

பெரம்பலூர்

கருணை அடிப்படையில் பணி

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து, பணி காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா, பெரம்பலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நேற்று நடந்தது. விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு இறந்த 62 போக்குவரத்துத்துறை பணியாளர்களின் வாரிசுதாரர்களில் 21 பேருக்கு டிரைவர் பணி நியமன ஆணைகளும், 35 பேருக்கு கண்டக்டர் பணி நியமன ஆணைகளும், 6 பேருக்கு தொழில்நுட்ப பணியாளர்களுக்கான ஆணைகளையும் வழங்கினார்.

விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கினார். பிரபாகரன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பெரம்பலூர் பணிமனையில் பணியாளர்கள் ஓய்வு எடுக்கும் வகையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய ஓய்வு அறையினை அமைச்சர் திறந்து வைத்தார்.

ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன்...

விழாவில் அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:-

கடந்த 10 ஆண்டு காலமாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வராமல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. போக்குவரத்து தொழிலாளர்களின் நலன் கருதி முதல்-அமைச்சர் ஆணையின்படி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு முடிவு எட்டப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்த அரசுக்கு ரூ.40 கோடி கூடுதல் செலவாகும்.

ஏற்கனவே, மின்சார பஸ்களை இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து விட்டோம். ஜெர்மன் வங்கி நிதி உதவியோடு 500 பஸ்கள் வாங்க முடிவெடுக்கப்பட்டு, முதற்கட்டமாக 100 பஸ்களுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அந்த பஸ்கள் சென்னையில் பரீட்சார்த்த முறையில் இயக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக பிற பெருநகரங்களில் மின்சார பஸ் இயக்கப்படும். போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்றவர்கள், பணிக்காலத்தில் இறந்தவர்களுக்கான பணப்பலன்கள் வழங்கப்படாமல் இருந்த நிலையினை மாற்றி முதல்-அமைச்சர் ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கியுள்ளதன் அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

வழித்தட நீட்டிப்பு வசதி

இதைத்தொடர்ந்து, மேட்டுப்பாளையத்தில் இருந்து வாலிகண்டபுரம் வரையிலான கூடுதல் பஸ் வசதியினையும், கிருஷ்ணாபுரத்தில் பிள்ளையார்பாளையம் முதல் கிருஷ்ணாபுரம் வரையிலான பஸ் வழித்தட நீட்டிப்பையும், வெள்ளுவாடியில் பசும்பலூர் முதல் வெள்ளுவாடி வரையிலான பஸ் வழித்தட நீட்டிப்பையும் அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், கும்பகோணம் கோட்டத்தின் மேலாண் இயக்குனர் மோகன், திருச்சி மண்டலத்தின் பொது மேலாளர் சக்திவேல், முதுநிலை துணை மேலாளர் கோவிந்தராஜ், பொது மேலாளர் (கூட்டாண்மை தொழில்நுட்பம்) முகமது நாசர் மற்றும் போக்குவரத்துக்கழக அலுவலர்கள், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story