தென்காசி காதல் விவகாரம்: குருத்திகாவின் உறவினர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


தென்காசி காதல் விவகாரம்: குருத்திகாவின் உறவினர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

தென்காசி காதல் விவகாரத்தில் குருத்திகாவின் உறவினர் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

மதுரை


தென்காசி மாவட்டம் கொட்டாகுளத்தை சேர்ந்த என்ஜினீயர் மாரியப்பன் வினீத் (வயது 22). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த நவீன் படேல் என்பவரின் மகள் குருத்திகாவும் சில ஆண்டுகள் காதலித்து வந்துள்ளனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் வினீத்தின் உறவினர்கள் முன்னிலையில் நாகர்கோவிலில் திருமணம் செய்தனர். பின்னர் வினீத்தின் வீட்டில் குருத்திகா வசித்தார்.

இதற்கிடையே தனது மகளை காணவில்லை என நவீன்படேல் குற்றாலம் போலீசில் புகார் அளித்தார். அதுதொடர்பான விசாரணைக்கு போலீஸ்நிலையத்தில் வினீத்தும், குருத்திகாவும் ஆஜராகிவிட்டு வீடுதிரும்பினர். அப்போது வினீத்தை தாக்கிவிட்டு, குருத்திகாவை அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடத்தி சென்றனர்.

இதையடுத்து வினீத், மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின் போது குஜராத்தில் இருந்து குருத்திகாவை மீட்டு மதுரை ஐகோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். விசாரணையில், குருத்திகா தனது உறவினர்களுடன் செல்ல விரும்புவதாக தெரிவித்தார். அதன் பேரில் அவரை உறவினர்களுடன் ஐகோர்ட்டு அனுப்பி உத்தரவிட்டது.

இதற்கிடையே அவர் கடத்தல் வழக்கில் அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் தங்களுக்கு ஜாமீன், முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் ஏற்்கனவே தள்ளுபடி செய்யப்பட்டு இருந்தன. இந்த நிலையில் குருத்திகாவின் உறவினர் ஜெகதீஷ் லலித்குமார் படேல், தனக்கு முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் அன்பு நிதி ஆஜராகி, மனுதாரர் மற்றும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டு தீவிரமானது. வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் மனுதாரருக்கு முன் ஜாமீன் அளித்தால் விசாரணை பாதிக்கப்படும். எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதாடினார். இதனையடுத்து மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Next Story