தென்காசி நகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை


தென்காசி நகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை
x

தென்காசி நகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.

தென்காசி

தென்காசி:

தென்காசியில் ரத வீதிகள், சுவாமி சன்னதி பஜார், அம்மன் சன்னதி பஜார் ஆகிய பகுதிகளில் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளதாக நகராட்சி ஆணையாளர் பாரிசான் அறிவித்திருந்தார். இந்தநிலையில் நேற்று காலை தென்காசி வியாபாரிகள் நலச்சங்க செயலாளர் மாரியப்பன், பொருளாளர் முகைதீன் மற்றும் வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் அவர்கள் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோயினால் வியாபாரம் சரிவர நடைபெறவில்லை. வட்டிக்கு பணம் வாங்கி வட்டியும், பணமும் திரும்ப செலுத்தாத நிலையில் நஷ்டத்தில் உள்ளனர். மேலும் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பொருட்கள் வாங்க வரும்போது சிரமப்படுவார்கள். ஏற்கனவே கடந்த 1984-ம் ஆண்டு நகராட்சியிடமும், 2018-ம் ஆண்டு உதவி கலெக்டரிடமும் வியாபாரிகள் குழுவுடன் நடைபெற்ற கூட்டத்தில் 3 அடி கடையின் முன்புறம் தடுப்புகள் வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. தற்போது மழைக்காலமாக இருப்பதால் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மறுபரிசீலனை செய்து வியாபாரிகளுக்கு உதவி செய்ய வேண்டுகிறோம். மூன்று மாத காலத்திற்கு பிறகு நகராட்சி நிர்வாகம் மற்றும் வியாபாரிகள் குழு அமைத்து பேசி முடிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக நகராட்சி ஆணையாளர் பாரிசான் தெரிவித்தார்.


Next Story