தென்காசி-நெல்லை அரசு பஸ்களில் நிரம்பி வழியும் பயணிகள் கூட்டம்
தென்காசி-நெல்லை இடையே இயக்கப்படும் அரசு பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே கூடுதல் பஸ்களை இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பாவூர்சத்திரம்:
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நெல்லை, தென்காசியில் உள்ள அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் ஏராளமானவர்கள் பணியாற்றி வருகிறார்கள். மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு ஏராளமான மாணவ-மாணவிகளும், பல்வேறு பணிகள் நிமித்தமாக பொதுமக்களும் சென்று வருகின்றனர்.
இதனால் காலை நேரத்தில் நெல்லை, தென்காசி செல்வதற்கு பாவூர்சத்திரம் பஸ் நிலையத்துக்கு ஏராளமானோர் வருகின்றனர். குறிப்பாக நெல்லைக்கு செல்வதற்கு கூட்டம் அலைமோதுகிறது.
ஆனால் அந்த நேரத்தில் போதிய அளவில் அரசு பஸ்கள் இயக்கப்படாததால், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்வோர் என்று அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிவதால் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.
மேலும் காலை நேரத்தில் பெரும்பாலான பஸ்கள் பாவூர்சத்திரம், ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நிற்காமல் செல்லும் இடைநில்லா பஸ்களாக (ஒன் டூ ஒன்) இயக்கப்படுகின்றன.
எனவே பாவூர்சத்திரம், ஆலங்குளம் உள்ளிட்ட அனைத்து பகுதி மக்களும் பயன்பெறும் வகையில், காலையில் அனைத்து இடங்களிலும் நின்று செல்லும் பஸ்களை அதிகமாக இயக்க வேண்டும், கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.