தென்காசி: ரூ.2 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் - 2 பேர் கைது
தென்காசியில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மற்றும் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பிடிபட்டன. 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி,
தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்படி தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் தென்மண்டல காவல்துறை தலைவரின் தனிப்படை உதவியுடன் கஞ்சா விற்பனை சம்பந்தமாக தென்காசி பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தென்காசி புதிய பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரைப் பிடித்து விசாரித்த போது அவர்கள் தென்காசி உடையார் தெருவை சேர்ந்த மணிச்செல்வன் (வயது 28) மற்றும் செங்கோட்டையை சேர்ந்த மணிகண்டன் (வயது 24) என தெரியவந்தது.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். தீவிர விசாரணையில் அவர்களிடம் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 4 கிலோ கஞ்சாவும், ரூ 2 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களை போலீசார் கைது செய்து கஞ்சாவையும் கள்ள நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் தொடர்ந்து இது சம்பந்தமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.