ராமேசுவரம் கடலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்
தை அமாவாசையையொட்டி ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று புனித நீராடி, ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்தனர்.
ராமேசுவரம்,
தை அமாவாசையையொட்டி ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று புனித நீராடி, ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்தனர்.
புண்ணிய தலம் ராமேசுவரம்
முன்னோர் வழிபாட்டுக்கு உகந்ததாக ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்கள் கருதப்படுகின்றன.
அது போல் காசிக்கு நிகரான புண்ணிய தலமாக ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் விளங்குகிறது.
எனவே ஆடி, தை அமாவாசை நாட்களிலும், புரட்டாசி மகாளய அமாவாசை அன்றும் ராமேசுவரம் வந்து, அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, தங்கள் முன்னோர் நினைவாக திதி, தர்ப்பணம் கொடுத்து முன்னோரை வழிபடுவதும், ராமநாதசுவாமியை நீண்டவரிசையில் நின்று தரிசனம் செய்வதும் சிறப்புக்குரியதாகும். எனவே மற்ற அமாவாசை நாட்களை விட, இந்த நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து புனித நீராடுகிறார்கள்.
தீர்த்த கிணறுகளிலும் நீராடல்
நேற்று தை மாத அமாவாசை என்பதால், ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்து குவிந்தனர். அதிகாலை 3 மணி முதல் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடினார்கள். தங்களது முன்னோர்களை வேண்டி திதி, தர்ப்பணபூஜை செய்தனர். பச்சரிசி மாவால் செய்த பிண்டத்தையும், எள்ளையும் கடலில் கரைத்தும் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி வழிபட்டனர்.
அதன்பின்னர் பக்தர்கள் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராடுவதற்காக கோவிலின் வடக்கு கோபுர வாசல் பகுதியில் இருந்து வடக்கு ரத வீதி சாலை முழுவதும் நீண்ட வரிசையில் காத்திருந்து தீர்த்தமாடினார்கள்.
தீர்த்தவாரி
கோவிலில் கிழக்கு வாசல் பகுதியில் இருந்து கிழக்கு ரதவீதி சாலை மற்றும் தெற்கு கோபுர வாசல் வரையிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாத சுவாமியையும், பர்வதவர்த்தினி அம்பாளையும் தரிசனம் செய்து சென்றனர்.
தங்க கருட வாகனத்தில் ராமபிரானும், சுவாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனங்களிலும், பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலில் இருந்து எழுந்தருளி சன்னதி தெரு வழியாக அக்னி தீர்த்த கடற்கரைக்கு வந்தனர். அக்னி தீர்த்தவாரி நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பின்னர் அங்குள்ள மண்டகப்படியில் சுவாமி-அம்பாள், ராமர் எழுந்தருளி, மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மீண்டும் அங்கிருந்து புறப்பாடாகி ரதவீதி வழியாக உலா வந்து கோவிலை அடைந்தனர்.
சிறப்பு பஸ்கள்
கடற்கரை, சன்னதி தெரு, ரதவீதிகள், நடுத்தெரு திட்டக்குடி சந்திப்பு சாலை என நகர் முழுவதும் நேற்று பக்தர்கள் கூட்டமாக காட்சி அளித்தது.
பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க ராமேசுவரம் நகருக்குள் சுற்றுலா வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. வெளியூர்களில் இருந்து வந்த வாகனங்கள் ராமேசுவரம் சிவகாமி நகர் வழியாக ஜெ.ஜெ.நகரில் உள்ள நகராட்சி வாகன நிறுத்தும் இடத்திற்கு அனுப்பப்பட்டன.
தை அமாவாசையையொட்டி. தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் ராமேசுவரத்துக்கு நேற்று ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ராமேசுவரத்துக்கு வந்திருந்த ஏராளாமான பக்தர்கள் தனுஷ்கோடிக்கும் சென்றனர்.