முருகர் கோவில்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்


ஆடிக்கிருத்திகையொட்டி முருகர் கோவில்களில் சிறப்பு பூஜைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருவண்ணாமலை

ஆடிக்கிருத்திகையொட்டி முருகர் கோவில்களில் சிறப்பு பூஜைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஆடிக்கிருத்திகை

ஆடி மாதம் வரும் கிருத்திகை சிறப்பு வாய்ந்ததாகும். இந்த நாளில் அனைத்து முருகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். ஆடிக்கிருத்திகையையொட்டிதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்து கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் வலம் வந்தனர்.

வாணாபுரம் அருகே உள்ள பழையனூரில் 2 ஆயிரத்து 500 அடி உயரத்தில் பாலமுருகன் மலைக்கோவில் உள்ளது.

நேற்று ஆடிக்கிருத்திகையையொட்டி பழையனூர் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். கோவில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆரணி

ஆரணி கொசப்பாளையம் பகுதியில் உள்ள வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம், மகா அபிஷேகம், மகா அலங்காரம், தங்க கவசம் அணிவித்து மகா தீபாராதனையுடன் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் சின்ன கடை தெருவில் உள்ள பழனியாண்டவர் கோவில், ஆரணி பாளையம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், முள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள வழித்துணை முருகர் கோவில், சேவூர் வள்ளி தேவசேனா சுப்பிரமணிய சுவாமி கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏராளமானோர் காவடி எடுத்து வழிபாடு செய்தனர். பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

குங்கிலிய நத்தம்

இதேபோல் வாணாபுரம் அருகே உள்ள குங்கிலியநத்தம் பாலமுருகன் கோவிலில் நேற்று காலை முருகனுக்கு பால், தயிர், வெண்ணெய், பன்னீர், இளநீர் உள்ளிட்டவைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடந்தது.

பக்தர்கள் காவடி எடுத்தும் முதுகில் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியவாறும் வந்து முருகனுக்கு மாலை சாற்றினர். இதேபோல் பல்வேறு முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கண்ணமங்கலம்- கீழ்பென்னாத்தூர்

கண்ணமங்கலத்தை அடுத்த சந்தவாசலில் உள்ள பழனி ஆண்டவர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது.

இதேபோல் ரெட்டிபாளையம் தம்டகோடி மலையில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலில் சாமிக்கு தங்கக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள சோமாசிபாடியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தில் வீற்றிருக்கும் வள்ளி-தெய்வானை சமேத முருகர் கோவிலில் அதிகாலை காலை 5.30 மணியளவில் சக்திவேல் பூஜை நடந்தது. பகல் 11 மணிக்கு மேளதாளத்துடன் பக்தர்கள் பலரும் முதுகில் அலகு குத்தி பூந்தேர்களை இழுத்தும், பால்காவடி, சந்தனகாவடி, புஷ்பகாவடி போன்ற பலவகையான காவடிகளை முதுகில் ஏந்தியபடி "முருகனுக்கு அரோகரா" கோஷங்களை எழுப்பியவாறு கோவிலை அடைந்தனர். அங்கு நேர்த்திக் கடனை செலுத்தினர்.

ேமலும் பல பக்தர்கள் அந்தரத்தில் தொங்கியபடி டிராக்டர் போன்ற வாகனங்களில் ஊர்வலமாக கோவிலை அடைந்தது மெய் சிலிர்க்க வைத்தது.

மாலை 6.30மணியளவில் கோவில் தீர்த்தத்தில் செங்கழுநீர் மலரை எடுத்து வந்து முருகருக்கு சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 9 மணிக்கு கோவில் உட்பிரகாரத்தில் மேளதாளத்துடன் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் வலம் வரும் நிகழ்ச்சியும் நடந்தது.

நட்சத்திர கோவில்

கலசபாக்கத்தை அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு காலை சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டுவள்ளி தெய்வானையுடன் சிவசுப்பிரமணியர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் காவடி எடுத்தும், முதுகில் அலகுகுத்தி தேர் இழுத்தும் வாயில் 20 அடி நீளம் வேல் குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தேவனாம்பட்டு ஊராட்சியில் உள்ள தேவகிரி மலை மீது அமைந்துள்ள சிவசுப்பிரமணியர் சுவாமி கோவில், வெங்கட்டம்பாளையம் பாலதண்டாயுதபாணி கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


Next Story