சேரன்மாதேவியில் பொதுமக்கள் சாலைமறியலுக்கு முயன்றதால் பரபரப்பு


சேரன்மாதேவியில் பொதுமக்கள் சாலைமறியலுக்கு முயன்றதால் பரபரப்பு
x

சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி சேரன்மாதேவியில் பொதுமக்கள் சாலைமறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

நெல்லையில் இருந்து சேரன்மாதேவி, அம்பை வழியாக பாபநாசம் வரை சாலை விரிவாக்க பணிகள் கிட்டத்தட்ட 50 சதவீதம் வரை நிறைவடைந்துவிட்டது. இதற்கிடையேகடந்த மாதம் சேரன்மாதேவி அருகே சாலை விரிவாக்கத்தின் போது ஆட்டோ மீது மரம் விழுந்து 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் சேரன்மாதேவி சுற்றுவட்டார பகுதியில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் சாலையில் மணல் கொட்டப்பட்டுள்ள இடங்களில் ஈரப்பதம் இல்லாததால் சாலை முழுவதும் வாகனங்கள் செல்லும்போது புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி சாலை ஓரங்களில் கடை நடத்துபவர்கள், வீடுகளில் வசிப்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் சாலை பணிகள் முழுமையாக நிறைவடையாமல் இருப்பதால் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

இந்தநிலையில் சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த அ.தி.மு.க, எஸ்.டி.பி.ஐ, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சியினர் மற்றும் இப்பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் இணைந்து சேரன்மாதேவி ரவுண்டானா பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

தகவல் அறிந்த சேரன்மாதேவி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி தலைமையில் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story