தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்


தினத்தந்தி 5 April 2023 6:45 PM GMT (Updated: 5 April 2023 6:46 PM GMT)

தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நடந்தது.

தூத்துக்குடி

தென்திருப்பேரை:

தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோவிலில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் ெசய்தனர். வருகிற 13-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

பங்குனி திருவிழா

தென்திருப்பேரையில் நவதிருப்பதி கோவில்களில் ஏழாவது திருப்பதியாகவும், சுக்கிரனுக்கு அதிபதியாகவும் விளங்கும் மகரநெடுங்குழைக்காதர் கோவிலில் பங்குனி திருவிழா ஆண்டுதோறும் பக்தர்களால் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டிற்கான பங்குனி திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிப்பட்டம் ஊா்வலமாக எடுத்து செல்லப்பட்டது. உற்சவா் நிகரில் முகில்வண்ணன், தேவியர்களுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பின்னா் கொடிக்கு மாலை, மரியாதை செலுத்தப்பட்டு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டு காலை 7 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தேரோட்டம்

திருவிழா நாட்களில் தினமும் சுவாமி நிகரில் முகில்வண்ணன் பல்வேறு வாகனங்களில் மாடவீதி மற்றும் ரதவீதிகளில் வீதி புறப்பாடு நடைபெறுகிறது. வருகிற 9-ந் தேதி கருட சேவை நடைபெறுகிறது. திருவிழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் வருகிற 13-ந்தேதி நடைபெறுகின்றது. வருகிற 14-ந் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் நிா்வாகத்தினா் மற்றும் உபயதாரா்கள் செய்து வருகின்றா்.


Next Story