தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடை நீக்கம்
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பாலியல் தொல்லை
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் சட்டம் சார்ந்த மருத்துவ பிரிவில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் டாக்டர் சதீஷ்குமார். இவர் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 2-ம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து அந்த மாணவி தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் அமுதவல்லியிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணைக்குழு அலுவலர்களான டாக்டர்கள் கண்மணி, தண்டர்சீப், காந்தி ஆகியோர் உதவி பேராசிரியர் சதீஷ்குமாரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது மாணவி அளித்த புகாரில் முகாந்திரம் இருப்பது தெரியவந்தது.
பணியிடை நீக்கம்
இந்த விசாரணை குறித்த அறிக்கை மருத்துவக்கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே உதவி பேராசிரியர் சதீஷ்குமார் நேற்று பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மருத்துவக்கல்வி இயக்குனரகம் பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தர்மபுரியில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் உதவி பேராசிரியர் சதீஷ்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது விசாரணை அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவப்பணி என்பது மக்களை காக்கும் பணி. இந்த பணியில் உள்ளவர்கள் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபட்டால் பாரபட்சம் இன்றி அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.