கரூர் மாநகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் பணியிடை நீக்கம்
விஷவாயு தாக்கி 4 பேர் பலியான சம்பவத்தில் கரூர் மாநகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
விஷவாயு தாக்கியது
கரூர் சுக்காலியூர் காந்தி நகரை சேர்ந்தவர் குணசேகரன், வக்கீல். இவர் அப்பகுதியில் வீடு கட்டி வருகிறார். இதில் தாந்தோணிமலை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 23), மணவாசி சின்னமலைபட்டியை சேர்ந்த சிவக்குமார் (38) ஆகியோர் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த வீட்டின் அருகே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கழிவுநீர் தொட்டி கட்டி முடிக்கப்பட்டது. அதில் 2 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 15-ந்தேதி அந்த தொட்டியின் உள்புறம் அடிக்கப்பட்டிருந்த பலகைகள் மற்றும் சவுக்கு கட்டைகளை அகற்றும் பணியில் மோகன்ராஜ், சிவக்குமார் ஆகியோர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 2 பேரும் அலறியபடி மயங்கி விழுந்தனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து கட்டிடத்தில் பணி செய்து கொண்டிருந்த மணவாசியை சேர்ந்த சிவா என்கிற ராஜேஷ் என்பவர் அவர்கள் 2 பேரையும் மீட்க முயன்றுள்ளார். அப்போது விஷவாயு தாக்கி 3 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வு
இந்தநிலையில் சிவக்குமாருடன் வேலைக்கு சென்ற அதே பகுதியை சேர்ந்த கோபால் (36) என்பவர் 2 நாட்களாக வீட்டிற்கு வரவில்லை என அவரது மனைவி மாயனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபாலை தேடி வந்தனர்.இதையடுத்து, சிவக்குமார் உள்பட 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த கழிவுநீர் தொட்டி பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு கோபாலின் மோட்டார் சைக்கிளும், செருப்பும் கிடந்தது. இதனைதொடர்ந்து போலீசார் தீயணைப்பு வீரர்களை வரவழைத்து கழிவுநீர் தொட்டியில் இறங்கி சோதனை செய்தனர். அப்போது கோபாலும் அந்த தொட்டிக்குள் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனால் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்தது.
பணியிடை நீக்கம்
இதையடுத்து விஷவாயு தாக்கி 4 பேரை பலி வாங்கிய வீட்டை இடித்து அகற்ற மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. மேலும் தேசிய பட்டியல் இன ஆணையத்தின் துணைத்தலைவர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு இறந்தவர்களின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்தநிலையில் மாநகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் தங்கமணி என்பவரை பணியிடை நீக்கம் செய்து கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். மேலும் கரூர் மாநகராட்சி பகுதியில் அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும் எனவும் ஆணையர் தெரிவித்துள்ளார்.